×

1028 அரசு மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி வழக்கு: பதில் தர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 1,028 அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும் என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் வி.ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வி.வெடியப்பன் உள்ளிட்ட டாக்டர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். கடந்த 2018ல் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 1,884 அரசு மருத்துவர்கள் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 30 என்றும் பிற  பிரிவினர்களுக்கு 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தேர்வில் நாங்கள் அனைவரும் 48 முதல் 53 மதிப்பெண் வரை பெற்றுள்ளோம்.

இந்நிலையில், ஒரு சிலர் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. எழுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கவுன்சலிங் மூலம் காலிப்பணியிட விவரங்களை எடுத்துக் கூறி, அதில் அவர்கள் விருப்பமுள்ள ஊர்களை தேர்வு செய்த பின்னர், பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டன. இதுவரை இந்த நடைமுறைதான் இருந்து வந்தது. ஆனால், அப்போது கவுன்சலிங் இல்லாமல் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்து விட்டு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 1,884 பணியிடங்களில் வெறும் 856 பணியிடங்களை மட்டும் நிரப்பி விட்டு, 1,028 பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளனர். இதற்கிடையில், அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் மே மாதம் புதிய அறிவிப்பு வெளியிட்டு, ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று இணையதளத்தில் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்ற எங்களுக்கு பணி வழங்காமல், புதிய தேர்வை நடத்துவது சட்டவிரோதமாகும். எனவே, அரசு டாக்டர் பணிக்கு தேர்வு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி நியமனம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘கடந்த 2018ம் ஆண்டு நடத்திய தேர்வின்படி நிரப்பப்படாமல் காலியாக உள்ள 1,028 அரசு டாக்டர் பணியிடங்களை எப்படி நிரப்ப போகிறீர்கள் என்பது குறித்து இயக்குனர் (பொது சுகாதாரம்), மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் தலைவர் ஆகியோர் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : government doctors ,government ,Tamil Nadu ,Icort , Government Physician Service, Government of Tamil Nadu, iCort
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...