×

மூத்த குடிமக்களின் நலனே மக்கள் நல அரசுக்கான மதிப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மூத்த குடிமக்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை பொறுத்தே மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மருத்துவ செலவை 4 வாரத்தில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் ஓய்வுபெற்ற ஊழியரான ஈரோட்டை சேர்ந்த சண்முகத்தின் குடலில் கட்டி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்காக 2 லட்சத்து 74 ஆயிரத்து 147 ரூபாய் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். பொதுக் காப்பீட்டுப்திட்டத்தின்கீழ் தனது ஓய்வூதியத்திலிருந்து பங்களிப்பை வழங்கியிருந்ததால் மருத்துவ செலவை திரும்ப தரக்கோரி கிராமப்புற மருத்துவ பணிகள் இயக்குனருக்கு விண்ணப்பித்தார். அதை பரிசீலித்த இயக்குனர், காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களில் மருத்துவ செலவுகளை திரும்பி வழங்க நிதித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டும், அது அமல்படுத்தப்படவில்லை.இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில் 57 ஆயிரத்து 860 ரூபாயை மட்டும் ஒதுக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிய நிலையில் 57 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியதை எதிர்த்து சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மற்றொரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சண்முகத்தின் மருத்துவ செலவை திரும்பி வழங்குவதற்கான கருத்துரு நிதித்துறை செயலாளரின் முன்பு நிலுவையில் இருப்பதால்,

அதன் தற்போதைய நிலைகுறித்து தெரிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: ஓய்வுபெற்ற ஊழியரான மனுதாரர் 2வது முறை நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்பவில்லை. எனவே, மீதமுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 314 ரூபாயை 4 வாரத்தில் வழங்க வேண்டும். வயதான ஓய்வூதியதாரர்களுக்கு சேரவேண்டிய மருத்துவ சலுகைகளை வழங்காமலும், முறையாக நடத்தாமலும் இருப்பது சரியான நடைமுறையல்ல. அவசர நிலையில் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளை தேடிக்கொண்டு இருக்க முடியாது.

ஒவ்வொருவரும் உயிரை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். திட்டத்தில் சேர்க்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக கூறி, மருத்துவ செலவை திரும்ப வழங்க மறுக்கக்கூடாது. மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே மக்கள் நல அரசு மதிப்பிடப்படுகிறது. எதிர்காலத்தில் மருத்துவ செலவை திரும்ப தரக்கோரி வரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மனிதாபிமானத்தோடு பரிசீலிப்பார்கள் என நம்புகிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : senior citizens ,Madras High Court , Public Welfare Government, Madras High Court, Opinion
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...