×

வில்லியம்சன் 89 ரன் விளாசினார் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: இஷாந்த் அபார பந்துவீச்சு

வெலிங்டன்: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. அறிமுக வேகம் ஜேமிசன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்திருந்தது. ரகானே 38 ரன், பன்ட் 10 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பன்ட் 19 ரன் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அஷ்வின் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஓரளவு தாக்குப்பிடித்த ரகானே 46 ரன் எடுத்து (138 பந்து, 5 பவுண்டரி) சவுத்தீ வேகத்தில் விக்கெட் கீப்பர் வாட்லிங் வசம் பிடிபட்டார். இஷாந்த் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஷமி 21 ரன் எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் பிளண்டெல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்தியா முதல் இன்னிங்சில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 33 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன், சவுத்தீ தலா 4 விக்கெட், போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டாம் லாதம் 11 ரன், பிளண்டெல் 30 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 93 ரன் சேர்த்தது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டெய்லர் 44 ரன் (71 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி இஷாந்த் வேகத்தில் புஜாரா வசம் பிடிபட்டார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லியம்சன் 89 ரன் எடுத்து (153 பந்து, 11 பவுண்டரி) ஷமி பந்துவீச்சில் மாற்று வீரர் ஜடேஜாவிடம் பிடிபட்டார். நிகோல்ஸ் 17 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்துள்ளது. வாட்லிங் 14, கிராண்ட்ஹோம் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. கை வசம் 5 விக்கெட் இருக்க, 51 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 3, ஷமி, அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Williamson 89 ,innings ,New Zealand ,Ishant Abara Williamson , Williamson, New Zealand Frontline, Ishant
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...