×

என்பிஆர் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?: எடப்பாடி, ஓபிஎஸ்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்ன பாதிப்பு சொல்லுங்கள்” என்று சட்டப்பேரவையில் வெற்று முழக்கம் இட்டுவிட்டு, இப்போது, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ்  ஓபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வலிந்து சென்று ஆதரித்து வாக்களித்து, இன்றைக்கு நாட்டையே கிளர்ச்சிக் களமாக்கி-இந்தியாவில் வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் நிலவி வந்த சமூக நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” “சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” என்றும், “சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அதிமுக அரசு செய்யாது”என்று அலறித் துடித்து ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது, “குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி-குழியும் பறித்த கதையாக” இருக்கிறது. முதலமைச்சரைப் பொறுத்தமட்டில்-அவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்  பாதகங்களை வாக்களிக்கும் முன்பு படிக்கவே இல்லை என்பதும்- படித்தறிய விரும்பவில்லை என்பதும், கண்ணை மூடிக்கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைத்திடும் ஊதுகுழலாகச் செயல்பட்டதும், இந்த அறிக்கை வாயிலாகவே தெரியவருகிறது. “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் என்ன பாதிப்பு சொல்லுங்க” என்று சட்டமன்றத்தில் “வெற்று” ஆவேச முழக்கமிட்டார் முதலமைச்சர். என்.பி.ஆர். விவரங்கள்  “ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன”என்று சட்டமன்றத்தில் பச்சைப் பொய் சொன்னார் அமைச்சர் உதயகுமார்.

ஆனால் இப்போது, “தாய்மொழி, தந்தை, தாயார் பெயர்,பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றை தவிர்க்கலாம்”என்பதோடு மட்டுமின்றி, “ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம்”ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்றும் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.என்.பி.ஆர்.விவகாரத்தில் முதலமைச்சருக்கும்- அமைச்சர் உதயகுமாருக்குமே கருத்தொற்றுமை இல்லை, புரிதலும் இல்லை. எதுவுமே தெரியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல்,  நாடு எதிர்கொண்டுள்ள “விபரீதமான” பிரச்சினையில் “விளையாட்டுத் தனமாக”அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். 2003 குடியுரிமை சட்ட திருத்தத்தில் “மத அடிப்படையிலான பிளவு” கொண்ட குடியுரிமை வழங்கும் திட்டம் இல்லை. அதன் அடிப்படையில் முதன் முதலாக எடுக்கப்பட்ட என்.பி.ஆரில் “ மதரீதியாக பிளவுப்படுத்தி குடியுரிமை வழங்கும் பாஜக அரசின் 2019ம் வருட குடியுரிமைச் சட்டத் திருத்தம்,   புதிய என்.பி.ஆர். படிவம். பிறந்த தேதி கண்டுபிடிக்கும் கேள்வியில் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் புறக்கணிப்பு என்று எதுவும் இல்லை” என்ற அடிப்படை விவரத்தைக் கூட பழனிசாமி  தெரிந்து கொள்ள நாட்டம் காட்டவில்லை. என்ன செய்வது?  அவரது கவலை பதவியைக்  காப்பாற்றிக் கொள்வது- எஞ்சியிருக்கின்ற நாட்களில் எப்படி கஜானாவைக்  காலி  செய்வது என்பது மட்டுமே!

“குடியுரிமைத்  திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள்” என்று அதிமுக எம்.பி.க்களுக்குச் சொன்ன  “ஒரு அறிவுரை”சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்கள் நலன் ஆகியவற்றைச் சீர்குலைத்து- தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதற்கும், சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்கள் மீதே தடியடி நடத்துவதற்கும் உத்தரவிட்ட பழனிசாமி- இப்போது அச்சத்தின் உச்சத்திற்கு சென்று விட்டார். பாஜகவின் “செய்தித் தொடர்பாளராக” மாறி- குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டைப் பிளவு படுத்தும் என்.பி.ஆர். அதன் மூலம் வரவிருக்கும் என்.ஆர்.சி போன்றவற்றிற்கு வக்காலத்து வாங்குகிறார். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது உண்மை என்றால் “தமிழ்நாட்டில் என்.பி.ஆரை அனுமதிக்க மாட்டேன்” என்று அறிவித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டியது தானே! இப்போதாவது “என்.பி.ஆரை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று உடனடியாக அறிவித்து, இன்றே அமைச்சரவையைக் கூட்டி “குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் “குடியுரிமை திருத்தச் சட்டத்தை  ஆதரித்து மாபெரும்  தவறு செய்து விட்டோம்”என்பதை உணர்ந்து,  நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டு,  ஒரு கூட்டறிக்கையை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : government ,NPR ,Federal Government , Central Government ,letter , NPR, survey
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...