×

கோயில்களின் நிலம், சிலை, நகை காணாமல் போவதாக புகார் உதவி ஆணையர், ஆய்வர் கையெழுத்து இனி கட்டாயம்: நடைமுறையை மாற்றியமைத்து அறநிலையத்துறை கமிஷனர் அதிரடி

சென்னை: சொத்து பதிவேடுகளை உதவி ஆணையர், ஆய்வர் பரிசீலித்து கையொப்பமிடுவது கட்டாயம் என்று அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில் உள்ளன. இக்கோயிலுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. மேலும், தங்கம், வெள்ளி நகைகள், ஐம்பொன் சிலைகள் என விலைமதிப்பு மிக்க பொருட்களும் உள்ளன. இதை தவிர்த்து, பக்தர்கள் தானமாக நிலங்களும், நகைகளும் தருவதால் ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்கு வரும் சொத்துக்கள், நகை, சிலை எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. எனவே, அந்த சொத்து பதிவேடு விவரங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அது போன்று ஆய்வு செய்யாமல் கோயில் நிர்வாகம் தரும் தகவல்களை வைத்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், சொத்து, நகை, சிலை காணாமல் போவதாகவும் அவ்வப்போது புகார் வருகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆய்வர்கள் சொத்துப்பதிவேட்டினை முழுமையாக பரிசீலித்து கையொப்பமிட வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சொத்து பதிவேடுகளில் சரக ஆய்வர்கள் முழுமையாக பரிசீலித்து அனுப்புகிறார்களா என்ற விவரம் அறிய இயலவில்லை. மேலும், ெசாத்துப்பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களை எந்த ஆதாரத்தின்அடிப்படையில் அவை சரியென பரிசீலித்து ஒப்பிடுகின்றனர்  என்ற விபரமும் தெரியவில்லை. எனவே, சொத்து பதிவேடுகளை பரிசீலிக்கும் ஆய்வர்களுக்கு கீழ்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

* சொத்து பதிவேட்டில் அனைத்து பக்கங்களில் சரக ஆய்வர்கள் கையொப்பமிட வேண்டும்.
* பொன், வெள்ளி இனங்கள் நகை மதிப்பீட்டு அலுவலரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தால் அதன் அறிக்கை விவரத்துடன் குறிப்பிடுவதுடன் அதன் அறிக்கை நகலை அட்டஸ்ட் செய்து இப்பக்கத்தில் ஒட்டுதல் வேண்டும். இவ்விவரங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொத்துப்பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது என்ற விபரத்தை குறிப்பிட
வேண்டும்.
*அசையா சொத்துக்களான நிலம், கட்டிடம், மனை ஆகியவை குறித்து வருவாய்த்துறை ஆவணங்களில் அடிப்படையிலும் கோயிலில் உள்ள பழைய ஆவணங்களை பரிசீலித்தும் அந்த ஆவணங்களின் நகல்களையும் அட்டஸ்ட் செய்து இப்பக்கத்தில் ஒட்டப்பட வேண்டும். பழைய சொத்துப்பதிவேடுகள் ஏதுமிருப்பின் அவற்றின் எண், தேதி குறிப்பிட வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே சொத்து பதிவேடு அங்கீகரிக்கப்படவில்லை. வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ன.
* கற்சிலை, உலோக விக்ரகங்கள் குறித்தும், உற்சவ விக்ரகங்கள் குறித்தும் சொத்துப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளும் போது,  விக்ரகங்கள் குறித்து தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா  என்பதையும் பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவ்விபரத்தை குறிப்பிடுவதுடன் அவ்வறிக்கையின் நகலையும் அட்டஸ்ட் செய்து இப்பக்கத்தில் ஒட்டப்பட வேண்டும். இவை 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டதா அல்லது 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் பரிசீலித்தே சொத்து பதிவேட்டினை சரிபார்த்ததற்கான சான்றுடன் அனுப்ப வேண்டும். இவ்விபரங்களை பரிசீலிக்காமல் சரக ஆய்வர்கள் ஒப்புக்கு கையொப்பமிட்டு அனுப்பினால் இதில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சரக ஆய்வரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது. சரக ஆய்வர் பரிந்துரையின் அடிப்படையில் அனுப்படும் சொத்து பதிவேட்டை உதவி ஆணையர் பரிசீலித்த பிறகே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள கோயில்களில்  தங்கம், வெள்ளி நகைகள், ஐம்பொன் சிலைகள் என விலைமதிப்பு மிக்க பொருட்கள் உள்ளன.
* கோயில்களுக்கு சொத்து, நகை, சிலை காணாமல்  போவதாகவும் அவ்வப்போது புகார் வருகிறது.

Tags : Inspector of Complaints ,disappearance ,jewelery ,Charitable Action Commission ,Disappearance of Temples , Signature , Assistant Commissioner, Inspector of Complaints , Disappearance of Temples, Statue, Jewelry,Mandatory
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...