×

உலக சிந்தனை நாளாக கொண்டாடுவோம்!

உலக சிந்தனை நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22ம் தேதி சாரண இயக்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் கொண்டாடப்படுகிறது. லண்டன் லாண்சஸ்டர் கேட் பகுதியை சார்ந்த ஹெர்பர்ட் ஜார்ஜ் பேட்ன்பவல், ஹென்றியாட்டா கிரேஸ் ஸ்மித் பேடன்பவல் தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக 22.02.1857ல் சர் இராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன்பவல் பிறந்தார். சார்டர் ஹெளஸ் உயர்நிலைப்பள்ளியில் சராசரி மாணவனாக பயின்ற இவர் இயற்கை உற்றுநோக்கல், படகோட்டுதல், வேட்டையாடுதல், இரு கைகளிலும் ஓவியம் வரைதல், நட்சத்திரங்களை பார்த்து திசையறிதல், பாட்டு, இசை, நாடகம், தச்சு வேலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 19ம் வயதில் பள்ளி படிப்பை முடித்து படைவீரனாக தேர்வு எழுதினார்.

இந்தியாவிலிருந்த 13வது குசாஸ் (குதிரைப்படை) பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார். 1876 அக்டோபர் 30ம் தேதி இந்தியாவை நோக்கி பயணமாகி டிசம்பர் 6ம் தேதி பம்பாய் வந்தடைந்தார். படைவீரராக பணியேற்று செயலாற்றினார். ஓய்வு நேரங்களில் கட்டுரை, ஓவியங்கள் வரைதல், குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி பயிற்சி அளித்தல், பன்றிகளை வேட்டையாடுதல், குதிரை சவாரி போன்றவற்றில் ஈடுபட்டார். இந்தியாவில் இருந்த போது எழுதி தயாரித்த பயிற்சி குறிப்புகளே பிற்காலத்தில் இராணுவ சாரணியத்தை பற்றிய நூல் வெளியிட காரணமாக இருந்தது. 1884ல் தனது படைவீரர்களுடன் இங்கிலாந்து திரும்புகையில் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பன் துறைமுகத்தில் இறங்கி அங்கு நடைபெற்ற போயர்கள் உடான போரில் மலைகள் வழியாக செல்லும் புதிய மலைப்பாதையை பத்திரிக்கையாளரை போல மேற்கொண்டார்.

மாறுவேடமணிந்து 600 மைல்கள் குதிரை சவாரி செய்து வழியில் கண்ட ஆறு, பள்ளத்தாக்கு, குன்று ஆகியவற்றை வரைபடங்களாக வரைந்து உதவினார். பின்னர் இங்கிலாந்து திரும்பிய அவர் தனது படையுடன் ரஷ்யா, ஜெர்மன் போன்ற நாடுகளில் உளவறியும் பணியில் ஈடுபட்டார். 1887ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜுலு பழங்குடியினருடன் போர் செய்து தலைவர் டினி ஜுலுவை சிறைப்பிடித்தார். அங்கு ஜுலுக்கள் போர்க்கோலம் பூண்டு ஈட்டி, கோடரி ஆகியவற்றுடன் அணிவகுத்து செல்லும் காட்சி பிற்காலத்தின் சாரண இயக்கத்தில் புகுத்தினார்.
ஜுலு இனத்தவர்கள் தங்கள் சிறுவர்களை முதலில் சாரணாக்குவதை உணர்ந்தார். இளைஞர்கள் பதினைந்து பதினாறு வயதானதும் எல்லோர் முன்னிலையிலும் ஆடைகளை களைந்து உடல் முழுவதும் வெண்சாயம் பூசி கையில் ஒரு கேடயமும், ஈட்டியும் வழங்கி காட்டுப்பகுதிக்குள் அனுப்பி விடுவார்கள்.

அந்த வெண்சாயம் முழுவதும் நீங்கிய பிறகு ஊருக்குள் வரவேண்டும். அதற்கு முன்பாக யாருக்கும் தெரியாமல் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழவேண்டும், வேண்டிய உணவை தானே தேடிக்கொள்ள வேண்டும். விலங்குகளிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும். யாரேனும் பார்த்துவிட்டால் உடனே கொன்றுவிடுவார்கள். வெண்சாயம் முழுவதும் உலர்ந்து கீழே விழுந்து ஊருக்குள் வரும்போது வீர வரவேற்பு கொடுத்து ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் சாரண இயக்கத்தில் தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ளும் முறையை புகுத்தினார். 1895ல் அசாந்தி பழங்குடியினருடன் போர் செய்து தலைவர் பிராம்பே வை கைது செய்தார். அப்போது தலைவர் இடது கையை குலுக்கினார். அதுவே பிற்காலத்தில் சாரண இயக்கத்தில் சகோதரத்துவத்தை உணர்த்துவதற்காக சேர்க்கப்பட்டது.

1896ல் நடைபெற்ற போரில் பகைவர்களான ரொடிசியா பழங்குடி மக்கள் இவரை இம்பீஸா (தூங்காத ஓநாய்) என்று பாராட்டினர். 1897ல் கர்னலாக பதவி உயர்வுபெற்று ஐந்தாவது டாராக்கூன் காவற்படை தலைவராக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். படை உறுப்பினர்களை பல குழுக்களாக பிரித்து அணிப்போட்டிகள் நடத்தினார். இரவு நேரங்களில் விண்மீன்களை கொண்டு வழியறிதல் முறையை ஆராய்ந்தார். 1899ல் தென்னாப்பிரிக்காவில் 13.10.1899 முதல் 18.05.1900 முடிய 217 நாட்கள் மேப்கிங் பகுதியில் நடைபெற்ற போயர்களுடான போரில் வெற்றி பெற்றார். இப்போரில் சீருடையுடன் பயிற்சி பெற்ற சிறுவர்களை பயன்படுத்திக்கொண்டார். அவர்களுடைய துணிச்சலையும், இரவு நேர பணி செய்வதையும் அறிந்து சிறுவர்களுக்கான இயக்கம் ஒன்று ஆரம்பிக்க எண்ணம் ஒன்று உதயமானது.

அதன் காரணமாக 1907ம் ஆண்டு ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 9 வரை பிரெளன்சி தீவில் 20 சாரணர்களை கொண்டு நடத்தி முதல் சோதனை முகாமை நடத்தி சாரண இயக்கத்தை தொடங்கினார். 1908ம் ஆண்டு சிறுவர் சாரணியம் என்று நூலை வெளியிட்டார். 1910ம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகி 7ம் எட்வர்டு மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்நாள் முழுவதும் சாரண வளர்ச்சிக்காகவே பாடுபட்டார். 1912ம் ஆண்டு ஒலேவ் செயிண்ட் கிளார் ஸோம்ஸ் என்பவரை திருமணம் செய்து இருவரும் சாரண தொண்டில் ஈடுபட்டனர். 1914ம் ஆண்டு 6 முதல் 10 வயதுடைய மாணவர்களுக்கான குருளையர் பிரிவு தொடங்கப்பட்டது. 1916ம் ஆண்டு 6 முதல் 10 வயதுடைய மாணவிகளுக்கான நீலபறவையர் பிரிவு தொடங்கப்பட்டது.

1918ம் ஆண்டு 17 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கான திரிசாரணர் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1911ம் ஆண்டு முதல் சாரணியப்படை மத்திய பிரதேசம் ஜபல்பூரில் தொடங்கப்பட்டது. 1926ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற நான்காவது உலக சாரணியர் மாநாட்டில் உலகமெங்கும் உள்ள சாரணியர்களை நினைவு கூறவும், ஊக்குவிப்பதற்காகவும் ஒரு நாளை சிந்தனை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சாரண இயக்கத்தை தோற்றுவித்த சர் ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவல் மற்றும் அவரது மனைவி ஓலேவ் பேடன் பவல் ஆகியோரின் பிறந்த தினமான பிப்ரவரி 22ம் நாளை சிந்தனை நாளாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு நடைபெற்ற 30வது மாநாட்டில் சிந்தனை நாள் என்பது உலக சிந்தனை நாள் என மாற்றப்பட்டது.

உலகெங்கும் இருக்கக்கூடிய சாரண, சாரணியர் இயக்கங்கள் ஆண்டுதோறும் இந்த நாளினை பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள், சமுதாய சேவைகள் என செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலக சாரண சாரணியர் சங்கத்தால் ஒவ்வொரு கருப்பொருளுடன் (தீம்) கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடையே ஒழுங்குமுறை, நன்னடத்தை போன்றவற்றை வளர்ப்பதில் மிக முக்கிய பங்காற்றக்கூடிய சாரண அமைப்பினை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக வழிநடத்திட தமிழக அரசு வழிகாட்டி வருகிறது. பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், பள்ளி படிப்பை முடித்தவர்களும் இந்த இயக்கத்தில் சேர்ந்து சமுதாய செயல்பாடுகளை செய்யலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உடல் ஆரோக்கியம் வளர்த்தல், நன்னடத்தை, கைத்திறனை ஊக்குவித்தல், மற்றவர்களுக்கு தொண்டாற்றுதல் போன்றவற்றை வளர்ப்பதற்கான ஒரு அமைப்பாக இது இருக்கும்.

இந்த அமைப்பின் மூலம் ஆளுமைத்திறன், தலைமைப்பண்பு போன்றவை அணிமுறையின் மூலம் வளர்க்கப்படுகிறது. ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திடவும், வேலை வாய்ப்பு உள்ளிட்ட செயல்களில் முன்னேறிடவும் சாரணர் இயக்கம் உதவி புரியும். இந்த இயக்கத்தில் மாணவர்களை பொறுத்தவரை தேர்வு சின்னங்கள் பல நிலைகளில் உள்ளன. மேலும் சுகாதாரம் பேணுநர், மண்வள பாதுகாப்பாளர், சூரிய ஆற்றல் விழிப்புணர்வு, கிராம நலத்தொண்டன், கல்வியாளன், விண்மீன் அறிஞன், புற்றுநோய் விழிப்புணர்வு, விவசாய வல்லான், யோகா, சுவிம்மர், கணினி விழிப்புணர்வு, இயற்கை வல்லான், குடிமகன், புத்தக கட்டாளன் உள்ளிட்ட திறமைக்கான சின்னங்கள் நூறு உள்ளன.

அவற்றில் மாணவர்கள் தங்களுடைய சுய அறிவு மற்றும் பொது சேவையை வளர்த்துக்கொண்டு மேற்காணும் சின்னங்களை பெறலாம். மேலும் பல்வேறு வகையான முதலுதவிகள், ஆறு வகையான உடற்பயிற்சிகள், ஆக்கல் கலைகள், வெவ்வேறு தீ வகைகள், பல்வேறு வகையான சமையல் முறைகள், திசைகாட்டி , அவற்றைக்கொண்டு திசையறிதல், கோண அளவுகளை கொண்டு திசை வழி நடத்தல், உயரம் மற்றும் அகலம் கண்டறிதல், திறந்த வெளியில் நடைபெறக்கூடிய விளையாட்டுகளில் பங்கு பெறுதல் அவற்றின் மூலம் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், சமுதாய சேவைகளில் பங்குபெறுதல் தலப்படம், சைகைப்பேச்சு போன்ற பல்வேறு வகையான செயல்களில் தேர்ச்சி பெற்று மாநில ஆளுநர் விருது, குடியரசு தலைவர் விருது போன்றவற்றை பெற முடியும். இந்தியாவிலிருந்து பல்வேறு சாரண இயக்கங்கள் 1951ல் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு பாரத சாரண சாரணியர் என்று உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Tags : World Thinking Day , World Thought Day The World Thought Day is celebrated on the 22nd of February each year on behalf of the Scheme
× RELATED இன்று உலக சிந்தனை தினம் திருச்சியில் மயங்கி விழுந்தவர் சாவு