×

படிக்கட்டில் தொங்கியவாறு விபரீத பயணம்: போதிய பஸ் வசதி இல்லாததால் கல்லூரி மாணவ, மாணவிகள் அவதி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. சிதம்பரம்-கடலூர் புறவழிச்சாலையில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. அரசு கல்லூரிக்கு எதிரில்தான் ஒருங்கிணைந்த சிதம்பரம் நீதிமன்ற வளாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் அரசு கல்லூரிகளுக்கு பெயரளவிற்கே பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகள் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதுமானதாக இல்லை. தினம், தினம் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில்தான் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் எப்போது எந்த விபத்து ஏற்படுமோ என்ற அதிர்ச்சியில் மாணவர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பலமுறை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தியும் எவ்வித பயனுமில்லை. கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கூடுதல் பேருந்து இயக்க போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதில்லை எனவும், போதிய அக்கறை காட்டவில்லை எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அதனால் கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : College student ,stairwell , Government Arts College is located in C. Mudlur Village near Chidambaram
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது