×

நினைவான விவசாயிகளின் கனவு..காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதா அரசிதழில் சட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் வெளியிட்டிருந்தார். தமிழக சட்டப்பேரவையில்,தமிழ்நாடு மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட முன்வடிவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பின்னர் இந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இது  சட்டமாக  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட முன்வடிவின் முழு விவரம்

அந்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: இந்த சட்டம் 2020ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்தும் சட்டம் என வழங்கப் பெறும். இந்த சட்டத்தின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை. ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெயம் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளடங்கலான இயற்கை எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்தத் தடை பொருந்தும். எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.

அதேசமயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலை தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உட்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.

இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப் படுகிறது. முதலமைச்சரை தலைவராகக் கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 24 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அதிகார அமைப்பு செயல்படும். இது தனி அதிகார அமைப்பாகும். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அடங்கிய மாவட்ட அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில், மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் மிகாமல் ஆறு மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். 50 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும். ஆனால், ரூ.10 லட்சத்துக்கு குறையாத மற்றும் தொடர்ச்சியான மீறலை பொறுத்த வகையில் கூடுதல் அபாரதத்துடன், அத்தகைய மீறலில் ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், தண்டனையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Governor ,areas ,Cauvery Delta ,Agriculture Zone ,Transform Cauvery Delta ,Tamil Nadu , Cauvery, Delta, Legislative Assembly, Agriculture Zone, CM, Edappadi Palanisamy, Govt.
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை