×

ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் அதிமுக அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  அதிமுக அரசு என்பது நூலில் ஆடும் பொம்மையாக உள்ளது. பல வகை பொம்மைகளைப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நூலில் கட்டி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி எஜமானர்கள். அந்த எஜமானர்களிடமிருந்து, மாநிலத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெறுவதற்கான  வேட்கையோ வலிமையோ இந்த அடிமை அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதை, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் அம்பலமாக்கிவிட்டன.

திமுக ஆட்சியில் இருந்த 2011ம் ஆண்டு வரை  ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன் சுமை, அதிமுக அரசு பதவியேற்று 10 ஆண்டுகளுக்குள்  ரூ.4 லட்சம் கோடியாகி, 3 மடங்கு அதிகரித்திருப்பதை தான் இந்த பட்ஜெட் எடுத்துக் காட்டுகிறது. இதில், முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் துறைகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கி இருப்பது தான் மர்மமானதாக உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து வலுவான ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் எடுத்துரைத்தார்.  பிப்ரவரி 20ம் நாள் உயர்நீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு மோசடி குறித்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும்” என இந்த ஆட்சியாளர்களுக்கு ‘சான்றிதழ்’ (!) வழங்கியிருக்கிறாரே! அதனால், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து எது பேசினாலும், பேரவையில் அனுமதியில்லை என மறுத்துவிட்டு, தங்களைத் தாங்களே பாராட்டி, மேசையைத் தட்டும் பேச்சுகளுக்கு மட்டும் அதிக நேரம் வழங்கப்பட்டது.

 அதிமுக அரசு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் சந்தித்த படுதோல்வியினாலும், சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டும், திடீரென பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற  அரைகுறை அறிவிப்பை அவசரமாக வெளியிட்டது.  திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, காவிரி டெல்டா பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, வேளாண் மண்டலமாக்குவதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தி.மு.கவும் வரவேற்கிறது. ஆனால், அதிமுக0 அரசு அரைக் கிணறு தாண்ட நினைத்து, அதுவும் அவசர அவசரமாகத் தாண்ட நினைத்து, வாக்கு அரசியலை மனதில் வைத்து, செயல்படுவதைத் தொடக்கம் முதலே திமுக சுட்டிக்காட்டி வருகிறது. மத்திய அரசின் தயவில், பாஜகவின் கண்ணசைவில்,  ஆட்சி நடக்கின்ற காரணத்தால், மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனை வெளிப்படுத்தும் வகையில் திமுக உறுப்பினர்கள் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராசன், சுதர்சனம், மனோதங்கராஜ், அரவிந்த் ரமேஷ் ஆகியோர் எழுப்பிய பிரச்னைகளுக்கு உரிய பதில் எதையும் ஆளுந்தரப்பு வழங்கவில்லை. திமுகவின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எடுத்துரைத்து மக்கள் பணியாற்றினார்கள். தாய்மொழி நாளையொட்டி முதல்வர் விடுத்த அறிக்கையில், ‘விழிபோல எண்ணி நம் மொழிகாக்க வேண்டும்’என எம்.ஜி.ஆர். திரைப்படப் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் தான், ‘ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ஏமாறாதே.. ” என்ற பாடல் வரியும், “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடல்வரிகளும் உள்ளன. மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் இந்த அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது! மக்கள்தான்  மகேசர்கள்; எதையும் மறந்து விடவும் மாட்டார்கள்; ஏமாற்றுவோரை, நிச்சயம் மாற்றுவார்கள்; வெளியேற்றுவார்கள்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,MK Stalin ,AIADMK ,volunteers , Letter of Policy, AIADMK Government, MK Stalin
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...