×

புழல் சுகாதார நிலையத்தில் இடவசதி இல்லாமல் வெயில், மழையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள்: மேற்கூரை அமைக்க கோரிக்கை

புழல்: புழல், 22வது வார்டு காந்தி பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நோயாளிகள் வெயிலில் காத்திருந்து அவதிப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கன்னடப்பாளையம், சக்திவேல் நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், மெர்சி நகர், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், புழல் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மருத்துவமனையில் உட்காருவதற்கும், நிற்பதற்கும் கூட போதிய இடவசதி இல்லாததால் சுகாதார நிலையத்தின் வெளியே வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.

மேலும் கோடைகாலம் மற்றும் மழைக்காலங்களில் கூட நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று வரும் அவலநிலை உள்ளது. எனவே மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வெளியில் நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெறும் வகையில் மேற்கூரை அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், ‘‘இந்த மருத்துவமனை எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இடவசதிகள் இல்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றோம். எனவே இங்கு மேற்கூரை அமைத்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.


Tags : Pullam Health Center , Funeral Health Center, Accommodation, Veil, Rain
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை