×

கழிவு நீர் அகற்றும் போது உயிரிழந்தால் நடவடிக்கை: அதிகாரிகள் அதிரடி

சென்னை: திருவேற்காடு நகராட்சியில் கழிவு நீர் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நேற்று  நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையாளர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து ஆணையாளர் செந்தில்குமரன் கூறியதாவது: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட எந்த இடத்திலும் கழிவு நீர் தொட்டிகளில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்தல் போன்ற வேலை செய்யக்கூடாது. இயந்திரங்கள் மூலம் மட்டுமே கழிவு நீர் அகற்றுதல் மற்றும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். அதையும் மீறி வேலை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவு நீர் அகற்றும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிறுவன ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கழிவு நீர் தொட்டியில் ஆட்கள் இறங்கி வேலை செய்வது தெரிய வந்தாலோ பாரபட்சம் இல்லாமல் அபராதம் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை வரை நடவடிக்கை இருக்கும்.

கழிவு நீர் அகற்றுவது குறித்த விதிமுறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றி கழிவு நீர் அகற்றப்பட வேண்டும். மேலும்  திருவேற்காடு நகராட்சியில் குப்பை இல்லாத தூய்மையான நகராட்சியாக ஆக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். சுகாதாரமான ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலை உருவாக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.  சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர்.  இந்த கூட்டத்தில் திருவேற்காடு  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் தனியார் நிறுவனங்கள்,  கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், சுகாதாரப்  பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


Tags : Officers Action ,Death , Waste water, casualties, officials
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்