×

அயோத்திக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்ட அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொண்டது வக்பு வாரியம்: நாளை மறுநாள் முக்கிய முடிவு

லக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வதாக உ.பி சன்னி மத்திய வக்பு வாரியம் நேற்று அறிவித்தது. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளவும், மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த மாற்று இடத்தை ஏற்கக் கூடாது என உ.பி வக்பு வாரியத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டன. இந்நிலையில், அயோத்தி சோகாவால் பகுதியில் தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட கடிதத்தை வக்பு வாரியத்திடம், உ.பி அரசு இந்த மாத தொடக்கத்தில் வழங்கியது. இது குறித்து வக்பு வாரியத்தின் மூத்த தலைவர் பரூக்கி, 7 உறுப்பினர்களுடன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி கட்ட வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கும் வாய்ப்பு, வக்பு வாரியத்துக்கு இல்லை. அப்படி நிராகரித்தால், நீதிமன்ற அவமதிப்பாக மாறும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். அதனால், நாங்கள் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனு செய்யவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றம் இல்லை. உ.பி. அரசு எங்களுக்கு வழங்கிய நிலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். கோயில் வடிவமைப்பில் மாற்றம்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வரைபடத்தை விஸ்வ இந்து பரிஷத் 30 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தது. அதில், 125 அடி உயரத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், 3வது கூடுதல் தளம் அமைப்பதற்காக 160 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்ட, கட்டுமான குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர்களுடன் கட்டுமான குழு தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா ஆலோசனை நடத்த உள்ளார். இதனால், விஸ்வ இந்து பரிஷத்தின் ராமர் கோயில் வரைபட மாதிரி மாற்றம் செய்யப்படலாம் என ராமர் கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைதியாக கோயில் கட்டபிரதமர் மோடி வேண்டுகோள்ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பிரதமர் மோடியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இது குறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராமர் கோயில் கட்டும் பணி, மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பில்லாமல்  அமைதியாக நடக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராமர் கோயில் பூமி பூஜைக்கு, அயோத்தி வரும்படி பிரதமருக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை,’’ என்றார்.

Tags : Ayodhya ,government ,Wakpu Board ,mosque ,land , Wakpu Board,accepts, 5 acres, land provided, mosque in place, Ayodhya
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்