×

மக்கள் ஆதரவுடன் எடுக்கும் நடவடிக்கைக்கு கைமேல் பலன் காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேர்பவர்கள் எண்ணிக்கை சரிவு: ராணுவம் பெருமிதம்

ஸ்ரீநகர்; ‘மக்களுடன் இணைந்து எடுக்கப்படும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையால், காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் சேருவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது,’ என ஜம்மு காஷ்மீர் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செய்தி நிறுவனத்துக்கு தி்ல்லான் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்க, ‘மா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்களுடைய ஒவ்வொரு ஆபரேஷனின் போதும் உள்ளூர் தீவிரவாதிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல்வேறு வாய்ப்புகளை தருகிறோம்.

தேடுதல் வேட்டையின் பாதி எல்லையை எட்டியதும் என்கவுண்டரை தவிர்க்கும் விதமாக பெற்றோர் அல்லது சமூகத்தில் உள்ள பெரியவர்களை கொண்டு தீவிரவாத இயக்கத்தில் இருந்து திரும்பி வர அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த முயற்சி பலமுறை வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தீவிரவாதிகளின் விவரம் அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியிடப்படுவதில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் தீவிரவாத இயக்கத்தில் சேருவோர் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில் இது தற்போது வெறும் 5 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் ஒரு டஜன் பேர்
தில்லான் தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், ‘கடந்தாண்டில் காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தில் சேருவோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்துள்ளது. தீவிரவாத இயக்கத்தில் சேருவதால் லாபம் இல்லாததே இதற்கு காரணம். அதேபோல், முன்பு தீவிரவாத இயக்கத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட நிலை இருந்தது. இப்போது, அந்த நிலை மாறி அவர்களின் உறவினர்கள் ஒரு டஜன் பேர் மட்டும் பங்கேற்கும் நிலை உருவாகி இருக்கிறது,’ என கூறியுள்ளார்.

Tags : Army ,extremist organization ,Kashmir ,militant organization , Decline , joining militant,organization , Kashmir, Army boasts
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...