×

பூண்டி கால்வாய்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு: நீர் வரத்து பாதிக்கும் அபாயம்

சென்னை:திருவள்ளூர் அருகே பூண்டி ஏரி வரத்துக் கால்வாய்களில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றறப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதால் மழைக்காலங்களில் நீர்வரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  திருவள்ளூர் அருகே பூண்டி ஏரிக்கான உள்வரத்து கால்வாய்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் இருந்து வந்தது. இதனால் கால்வாய்கள் மணல் குவிந்து, முள்புதர்கள் மண்டிக் காணப்பட்டது. அதிலும், பூண்டி ஏரிக்கான உள் வரத்துக்கால்வாயை, அப்பகுதிகளில் உள்ள சமூக விரோதிகள் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். இதனால், மழைக்காலங்களிலும் நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது. அத்துடன், அப்பகுதி கிராமங்களுக்குள் நீர் புகும் அபாயமும் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பூண்டி ஏரிக்கான உள்வரத்துக் கால்வாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று பூண்டி ஏரி உள்வரத்துக் கால்வாய்களான திருப்பாச்சூர், கைவண்டூர், சென்றாயன்பாளையம், நாத்தவாடா, பாண்டூர், காரணி உள்ளிட்ட கால்வாய்களில் மழை நீர் எளிதாகக் கடந்து செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில், கால்வாய்கள் முட்புதர்கள் மற்றும் மேடான பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், கடந்த 6 மாதங்களுக்கு முன் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 அப்போது, ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் ஆக்கிரமித்து பயிர் செய்யும் சிலர் தடுத்து வந்தனர்.

இதில், காரணி கிராமத்தில் பூண்டி ஏரிக்கான வரத்து உள் கால்வாய் ஆக்கிரமிப்பிலும், அதேபோல் அதற்கு அருகே இருந்த 40 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால், மழைக்காலங்களில் நீர் செல்ல வழியின்றி காரணி கிராமத்துக்குள் புகும் சூழ்நிலை இருந்தது. இதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகளுக்குப் பின், முழுவதுமாக ஆக்கிரமிப்பில் இருந்த கால்வாய் அகற்றறப்பட்டது. அதையடுத்து கால்வாய் பகுதியை அடையாளப்படுத்தும் நோக்கில் நடுகல்லும் நட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த சிலர் மீண்டும் அகற்றறப்பட்ட பகுதிகளில் அடையாளக் கற்களை அகற்றிவிட்டு மீண்டும் பயிரிட்டு வருகின்றனர். பூண்டி வரத்துக் கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தோரிடம் இருந்து மீட்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரி கூறுகையில், அப்பகுதி பொதுமக்கள் பூண்டி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், ரூ.1 கோடியில் 8 கி.மீ. தூரம் வரை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றறப்பட்டன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்யத் தொடங்கியுள்ளனர்.

 இது தொடர்பாக அவர்களிடம் முறையிட்டாலும் அதிகாரிகளை அகற்றவிடாமல் மிரட்டி வருகின்றனர். அதனால், இந்த கால்வாயில் ஆக்கிரமித்துள்ள காரணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Pooled canals, water influx
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...