ரேஷனில் அரிசிக்கு பதில் பணம் புதுவை ஆளுநர் உத்தரவு செல்லும்: முதல்வர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென்ற துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் முதல்வர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.  புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக அரிசு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பையும் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்.  இந்நிலையில், அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டுமென்று புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக டெபாசிட் செய்தால் அவர்கள் தரமான அரிசியை விருப்பத்திற்கேற்ப வாங்கிக்கொள்வார்கள் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, துணை நிலை ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது:  பொதுமக்களுக்கு அரிசிக்கு பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்னையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்படி அரிசிக்கு பதில் பணம் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு புதுச்சேரி அமைச்சரவையும், துணை நிலை ஆளுநரும் கட்டுப்பட வேண்டும். எனவே, துணை நிலை ஆளுநரின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. துணை நிலை ஆளுநரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியில் இருப்பதா..வேண்டாமா? முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கைக்கான துவக்க விழா புதுச்சேரியில் நேற்று நடந்தது.  உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: ஒரு பக்கம் மத்திய அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது. மற்றொரு பக்கம்  கவர்னர் கிரண்பேடி தினமும் தொல்லை கொடுத்து வருகிறார். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அதனை தடுத்து நிறுத்துகிற வேலையை கவர்னர் செய்கிறார். ஆட்சிக்கு விரோதமாக கிரண்பேடி செயல்படுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய அரசு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் ஆட்சியில் இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா? என்பதை நீங்கள் (காங்கிரசார்) தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>