×

ஆற்காடு அருகே பரபரப்பு சம்பவம் சத்துணவு அமைப்பாளரை மிரட்ட மாணவர்கள் வாந்தி மயக்க நாடகம்: ஊசி போட முயன்றதும் தப்பி ஓட்டம்

ஆற்காடு: ஆற்காடு அருகே சத்துணவு அமைப்பாளரை மிரட்டுவதற்காக சாப்பாட்டில்  பூச்சி கிடந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மாணவர்கள் போட்ட  நாடகத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.   ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில்  அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம் சத்துணவு அமைப்பாளரிடம் சென்று முட்டை மசாலா தருமாறு  கேட்டுள்ளார். காலியாகி விட்டது என்று சத்துணவு அமைப்பாளர் கூறி தரவில்லையாம்.   இதனால் கோபமடைந்த அந்த மாணவன்  மற்ற வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து அந்த சத்துணவு அமைப்பாளரை  பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில்  பூச்சி இருப்பதாக கூறி  வாந்தி எடுத்து மயக்கமாக உள்ளதாக நேற்று 16 மாணவர்கள் கூறியுள்ளனர்.  இதைக்கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை  திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  சிகிச்சைக்காக அழைத்துச்  சென்றனர்.  அங்கு அவர்களை  பரிசோதித்த டாக்டர்கள்  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அப்போது மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் வேண்டுமென்றே இதுபோல் கூறுவதாக தெரிந்து கொண்ட டாக்டர்கள் மாணவர்களிடம் உண்மையை வரவழைக்க  அனைவருக்கும் ஊசி போடுமாறு  செவிலியர்களிடம் கூறினர்.  இதைக் கேட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒன்றும் இல்லை என்று அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அதில் சத்துணவு அமைப்பாளரை மிரட்டுவதற்காக சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக கூறி  அதை சாப்பிட்டதால்  வாந்தி  மயக்கம் ஏற்பட்டதாக 9ம் வகுப்பு மாணவன் தங்களிடம்  சொல்லச்  சொன்னதாகவும்,  தங்களும் அதுபோல் சொன்னதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் வாந்தி மயக்கம்  நாடகம் போட்டது  தெரியவந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறிய டாக்டர்கள் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து  திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் திமிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மாணவர்கள் போட்ட  நாடகத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags : Vandalism ,Arcot , Arcot, Nutrition Organizer, Students, Vomiting Drama, Escapes
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...