×

ஆவின் தேர்தல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: மதுரை ஆவின் தேர்தலை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சக்கரப்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆவின் இயக்குநர்களாக நான் உள்ளிட்ட 17 பேர் கடந்த 15.12.2018ல் தேர்வு செய்யப்பட்டோம். மதுரை மற்றும் தேனி மாவட்டத்தைக் கொண்டிருந்த மதுரை ஆவினுக்கு 17 பேர் இயக்குனர்களாக இருந்தோம். கடந்த 22.8.2019ல் மதுரை ஆவினில் இருந்து தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. இதனால், மதுரை ஆவினில் இருந்த 6 இயக்குநர்கள் தேனி மாவட்டத்திற்கு சென்று விட்டனர். இதன்பிறகு தேர்வு செய்யப்பட்ட 11 பேர் இயக்குநர்களாக பணியாற்றினோம். இந்நிலையில், மதுரை ஆவினுக்கு இயக்குநராக இல்லாத முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் என்பவரை, தேர்தல் நடத்தாமல் தலைவராக நியமித்தனர். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை தலைவராக நியமித்தனர்.

அவரது நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழரசன் நியமனம் செல்லாது என்பதால், தேர்தல் மூலம் நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை ஆவின் நிர்வாகத்தை பொதுமேலாளர் கவனிக்க ேவண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் மதுரை உள்ளிட்ட 14 மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதேச்சதிகாரமானது. எனவே, மதுரை ஆவின் இயக்குநர்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மதுரை ஆவினில் காலியிடங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

 மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘11 இயக்குநர்களும் முறைப்படி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்களது பதவிக்காலம் முடிவதற்குள், அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த முடியாது. மொத்தமாக தேர்தல் நடத்துவது சட்ட விரோதம்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘ஐகோர்ட் உத்தரவுப்படி தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்த 7 ஆவின்கள் தற்போது 14 ஆவின்களாக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்வாக காரணம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவின் மீது உரிய தீர்ப்பளிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags : Avi , Avin election case, judgment adjourned
× RELATED அடியாட்களை ஏவி காதலியின் கணவரை தாக்கிய பாஜ பிரமுகர்