×

பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

சிட்னி: பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

தொடக்க நாளான இன்று சிட்னியில் நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் விளையாடின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் , பந்துவீச்சை தேர்வு செய்ய, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா 29 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ம்ரிதி மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் வெறும் 2 ரன்களில் வெளியேற, இந்திய அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இறுதிக் கட்டத்தில் தீப்தி ஷர்மா 49 ரன்கள் எடுக்க, இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலே 35 பந்துகளில் 51 ரன்கள் விளாசினாலும், மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். முடிவில் அந்த அணி 19.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியா தரப்பில் பூனம் பாண்டே 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும், ராஜேஸ்வரி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Tags : India ,Australia ,T20 World Cup Cricket , Cricket
× RELATED இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி...