×

ஈசிஆரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள் கட்ட திட்ட அனுமதி வழங்கியவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்,  சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழக பொதுபணித்துறை, கடலோர ஒழங்குமுறை மண்டலம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்,  முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாவின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து கட்டிடம் கட்ட திட்ட அனுமதி வழங்கியவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையின் பாதுகாப்போடு சர்வே நடத்தி ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : government ,Tamil Nadu ,buildings ,ECR , East Coast Road, Violation, Buildings, Government of Tamil Nadu, High Court, Order
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...