×

அரசு ரப்பர் கழக தொழிலாளர் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

நாகர்கோவில்:  அரசு ரப்பர் கழக தொழிலாளர் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அரசு மட்டத்தில்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். ஆனால் அப்போது ஊதிய உயர்வு அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக 47 முறை பேச்சுவார்த்தை நடந்தும், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடங்கினர். இதனால் ரப்பர் பால் வெட்டுதல், தொழிற்கூட பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கின.

இந்த பிரச்னை குறித்து நேற்று முன்தினம் 48 வது முறையாக, நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த இடைக்கால நிவாரணமான 23 ரூபாயுடன், மேலும் 17 ரூபாய் சேர்த்து குறைந்தபட்சம் 40 சம்பள உயர்வு வழங்க கேட்டு தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இடைக்கால நிவாரணமாக ₹23 உடன், மேலும் 2 சேர்த்து 25 வழங்குவோம் என்றனர். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

 இந்தநிலையில் நேற்று நாகர்கோவில், கோணத்தில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அந்த வகையில் நேற்று பகல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிஐடியு சார்பில் வல்சகுமார், எல்பிஎப் சார்பில் இளங்கோ, ஐஎன்டியுசி சார்பில் அனந்தகிருஷ்ணன், சோனியா ராகுல் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் நிகார் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அக்டோபர் மாதம் 26ம் தேதி அமைச்சர் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இடைக்கால நிவாரணம் ₹23 வழங்க ஒப்புக்கொண்டதில் கூடுதலாக 17ம் சேர்த்து 40 வழங்க வேண்டும் என்று கேட்டபோது அமைச்சர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டு முதல்வரிடம் இது தொடர்பாக பேச்சு நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஐந்தாறு மாதங்கள் ஆகியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அதிகாரிகள். அரசு மட்டத்தில்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை 49 வது முறையாக தோல்வியடைந்தது. இதனால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.

Tags : Government rubber union labor wage hike talks ,Rubber Corporation Labor Wage Hike ,talks , Government Rubber Corporation Labor Wage hike talks again
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...