×

இன்று மகாசிவராத்திரி குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்

சிவகங்கை: இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட குலதெய்வ கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மிகப்பழமையான பாரம்பரியம் கொண்ட மாவட்டமான சிவகங்கையில் நகரத்தார்களின் சார்பில் ஏராளமான கோயில்கள் உள்ளன. மேலும் நாட்டார், கிராமத்தினர் சார்பிலும் பெரிய மற்றும் சிறிய கோயில்கள் ஆயிரக்கணக்கானவை உள்ளன. இதில் குல தெய்வமாக வழிபடக்கூடிய பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏராளமானவை ஆகும். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து விட்டனர்.

வேறு இடங்களில் வசித்தாலும் மகாசிவராத்திரி அன்றும், மறுநாளும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. சிவராத்திரி அன்று சைவம் மட்டுமே கோயில்களில் சமைத்து சாப்பிடுவர். அன்றிலிருந்து மூன்றாவது நாள் களரியன்று பாரிவேட்டை நடத்தி அசைவம் சாப்பிடுவதோடு வழிபாடு நிறைவு பெறும். சிலர் சிவராத்திரி அன்றும், சிலர் மூன்று நாட்களும் கோயிலில் தங்கி இருப்பார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் நேற்று முதல் குலதெய்வ கோயில்கள் நோக்கி லட்சக்கணக்கானோர் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று வழிபாடு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

இதனால் மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோயில்கள் கூட நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. அனைத்து குலதெய்வ கோயில்களுக்கும் கார்கள், வேன்கள், டூவீலர்களில் என கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சென்றனர். இதில் அம்மன், கருப்பணசாமி, அய்யனார், முனியாண்டி கோயில்களே ஏராளமானவர்களுக்கு குல தெய்வமாக உள்ளன. சிவகங்கையில் காமாட்சி அம்மன், திரவுபதி அம்மன், சக்கரக்கோட்டை முனியாண்டி, நாலுகோட்டை முத்தடிகருப்பு, ஏனாதி அங்காள பரமேஸ்வரி, பெரியகோட்டை குருநாதன், அங்காளபரமேஸ்வரி கோயில், வயிரவன்பட்டி பைரவர்கோயில், பனையடிகருப்பு, நாட்டரசன்கோட்டை கருப்பணசாமி, குருநாதன், அங்காள பரமேஸ்வரி கோயில்களில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

மேலும் காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன், மறவமங்கலம் அரியநாச்சியம்மன், சிரமம் கொங்கேஸ்வரர் கோயில், திருப்புவனம் கத்தரிக்காய் சித்தர், மாரநாடு கருப்பணசாமி, இளையான்குடி அருகே வாணி கருப்பணசாமி, சாலைக்கிராமம் பைரவர் கோவில், திருவள்ளுர் சங்கையா கோவில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் லட்சக்கணக்கானோர் வழிபாட்டிற்காக குவிந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த (சிவகங்கை) சங்கர் கூறியதாவது, ‘எங்கிருந்தாலும் ஆண்டுதோறும் உறவினர்கள் உள்பட அனைவரும் இங்கு வந்துவிடுவோம். மற்ற நாட்களில் வர முடியாது. இந்த ஒரு நாளில் நமக்கு யாரென்றே தெரியாத சொந்தங்களைக்கூட சந்திக்க முடிகிறது. குல தெய்வத்தை நம் முன்னோர்களாக நினைத்து வழிபட்டு வருகிறோம். மற்ற கோயில்களில் நமக்கு நேரம் கிடைக்கும்போது வழிபட செல்லலாம். ஆனால் குலதெய்வ கோயில்களில், சம்பந்தப்பட்ட கோயிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் அனைவரும் இணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்பதால் கட்டாயம் வந்துவிடும் வழக்கம் உள்ளது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்து நாளை வரை வழிபாடு தொடரும்’ என்றார்.

Tags : devotees ,Mahasivarathri ,Heirloom temples ,gathering ,Pilgrims , Mahashivaratri today Pilgrims gathering in heirloom temples
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...