கொலை செய்ய காத்திருந்தபோது காதலி வராததால் ஆத்திரம் போலீஸ் பூத் மீது வாலிபர் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: காதலை முறிக்கும் கடைசி நாளில் காதலியை கொலை செய்ய காத்திருந்தபோது, அவர் வராததால் ஆத்திரமடைந்த வாலிபர், போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை பருவா நகர் பி- பிளாக்கை சேர்ந்தவர் வெங்கடேசன் (26). இவர், தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள், பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். வெங்கடேசன், ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் தினமும் குடித்துவிட்டு தனது காதலிக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அவரது காதலி, இவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வெங்கடேசன் தனது காதலியை தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு சம்பவம் குறித்து கல்லூரி மாணவி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், வெங்கடேசனை அழைத்து கண்டித்து அனுப்பி உள்ளனர். இதற்கிடையே காதலர் தினத்தன்று வெங்கடேசன், தனது காதலி வெறு ஒரு நபருடன் பேசி கொண்டிருந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து, தனது காதலியை கண்டித்துள்ளார். அப்போது கல்லூரி மாணவி, நான் இனி உன்னை காதலிக்க மாட்டேன். நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கல்லூரி மாணவி தனது செல்போனில் வெங்கடேசனின் நம்பரை பிளாக் செய்துள்ளார். பலமுறை தனது காதலியை தொடர்புகொள்ள முயன்றும், முடியாமல் தவித்த வெங்கடேசன், பிறகு நண்பர் செல்போனை வாங்கி காதலியுடன் பேசியுள்ளார். அப்போது, இருவரும் காவல் நியைத்திற்கு சென்று எழுதி கொடுத்துவிட்டு பிரிந்து விடலாம், என்று கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்திற்கு செல்வதற்கு முன், நான் உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் என்று வெங்கடேசன் கூறியுள்ளார். அதற்கு கல்லூரி மாணவி ஒப்புக்கொண்டதால், நாளை மாலை 4 மணிக்கு திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே சந்திக்கலாம் என்று வெங்கடேசன் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த கல்லூரி மாணவி, வேறு ஒருவனை காதலிப்பதால், தனக்கு கிடைக்காத அவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து, காதலியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, கத்தி மற்றும் பெட்ரோல் குண்டு தயாரித்து தனது மொபட்டில் மறைத்து வைத்திருந்தார்.

பேசியபடி வெங்கடேசன் மாலை 3.30 மணிக்கே திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே தனது மொபட்டுடன் காத்திருந்தார். ஆனால், கல்லூரி மாணவி மாலை 4.15 மணி வரை வரவில்லை. காதலியை செல்போனில் தொடர்புகொண்டபோது, பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் காதலி மீது வீச கொண்டு வந்த பெட்ரோல் குண்டை எடுத்து அருகில் இருந்த போலீஸ் பூத் மீது வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர்.  பிறகு அவர் கோபத்துடன் அங்கிருந்து தனது மொபட்டில் அங்கிருந்து சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்கள் உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த தேனாம்பேட்டை உதவி ஆய்வாளர் மாதவன் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது வெங்கடேசன் என தெரியவந்தது. அதே பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  வெங்கடேசன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி, கொலை மிரட்டல் என 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>