×

இன்று முதல் டெஸ்ட் நியூசிலாந்து-இந்தியா மோதல்

வெலிங்டன்: நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன்னில் தொடங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதேபோல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது. இந்நிலையில் இந்த அணிகளும்  2 போட்டிகளை கொண்ட ஐசிசி  உலக டெஸ்ட் சாம்பியன் தொடரில் விளையாட உள்ளன. அதில் முதல் டெஸ்ட் இன்று  வெலிங்டன்னில் தொடங்குகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் ஆளுக்கொரு தொடரை வென்று  2 அணிகளும் சமனிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி முன்னிலை  பெற 2 அணிகளும் வேகம் காட்டும். ஆனால் ஐசிசி உலக ெடஸ்ட் சாம்பியன் தொடரில் இதுவரை 7 டெஸ்ட்களில் விளையாடி உள்ள இந்தியா எல்லாப் போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு டெஸ்ட்டில் வெற்றி 4 டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

எனவே வலுவான இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி கூடுதல் புள்ளிகளை பெற நியூசிலாந்து முனைப்பு காட்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. டிரென்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது நியூசிலாந்து அணிக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக களம் காணப்போகும் இளம் வீரர்கள் போல்ட்டை  சமாளித்தால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாகலாம். இதுவரை இந்த 2 அணிகளும் மோதிய  கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியாவும், ஒருப் போட்டியில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒருப் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்தியா: கோஹ்லி (கேப்டன்), பிரித்வி, மயங்க், புஜாரா, ரஹானே,  ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின்,  உமேஷ் யாதவ், இஷாந்த், ஷமி, ஹனுமா விஹாரி, பும்ரா,  சைனி, ரிஷப், ஷுப்மன் கில்

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம்,  பிளெண்டெல், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோலஸ், வாட்லிங் (விக்கெட் கீப்பர்),  ஜெமீசன்,  சவுத்தீ,  டிரென்ட் போல்ட், அஜாஸ் படேல், டாரியல், மாட் ஹென்றி

Tags : New Zealand ,clash ,India ,Test , First Test , New Zealand - India clash
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்