×

இந்தியன் 2 படபிடிப்பின்போது 3 தொழிலாளர்கள் பலி இறந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி நிதி

* கமல்ஹாசன் அறிவிப்பு * ஆபரேட்டர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ேமலே இருந்து கிரேன் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்தனர். இது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ₹1 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார்.ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இதற்காக பூந்தமல்லி  அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைத்து  படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராட்சத கிரேன் மூலம்  முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது கிரேன் அறுந்து விழுந்ததில் ஷங்கரின் உதவி  இயக்குனர் கிருஷ்ணன், புரொடக்‌ஷன் உதவியாளர் மது, கலை உதவி இயக்குனர் சந்திரன் ஆகியோர்   சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை  உடனடியாக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவர்களுக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பலியானவர்களின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் 3 பேரின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது:
சினிமாவில் 100 கோடி, 200 கோடி என மார்தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான ஒரு பாதுகாப்பை அளிக்க முடியாத ஒரு துறையாக இருப்பது அவமானத்துக்குரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. என்னால் முடிந்தது இந்த குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் ஒரு கோடி ரூபாயை அறிவிக்கிறேன். இது இறந்த உயிருக்கான இழப்பீடு அல்ல. அவர்களில் சிலர் ரொம்பவே ஏழை மக்கள். என்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் கிருஷ்ணா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் பேசினார். ஆனால் இன்று அவர் இல்லை. மது, சந்திரன் ஆகியோரும் இன்று இல்லை. இந்த தொகை அவர்களுடைய குடும்பம் பாதுகாப்புக்காகவும், அடிபட்டவர்களின் குடும்பம் வேலையில்லாத நேரத்தில் கரை சேர்வதற்கும் ஒரு முதலுதவியாக நினைக்க வேண்டும். இனி நடக்கப் போகும் படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். அதற்கான காப்பீடு இருக்க வேண்டும். அதற்கு முழுத்துறை பங்கு கொள்ள வேண்டும். இது வேண்டுகோளாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இது நம் கடமை என்றார்.

இயக்குனர் ஷங்கர் காயமா?
பட  இயக்குனர் ஷங்கருக்கும் கால் எலும்பு முறிந்துவிட்டதாக நெட்டில்தகவல் பரவியது. பின்னர் அது உண்மை இல்லை என்று தெரியவந்தது. பிறகு ஷங்கரும் கமல்ஹாசனும் காயம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி
பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன். இவரது இளைய மகள் அமிர்தாவின் கணவர் கிருஷ்ணா.
‘இந்தியன் 2’ படத்தில் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்தில் பலியான மூவரில் கிருஷ்ணாவும் ஒருவர்.

நூலிழையில் உயிர் தப்பினேன்
படப்பிடிப்பில் உயிர் தப்பியது குறித்து கமல்ஹாசன் கூறும்போது, ‘விபத்து நடந்த இடத்தில் நூலிழையில் உயிர்தப்பிய கதைதான் நடந்தது. 4 நொடிகளுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் தள்ளி போய்விட்டார். ஒளிப்பதிவாளரும் தள்ளி போய்விட்டார். எந்த கூடாரம் நசுங்கியதோ, அதற்குள் நானும் காஜல் அகர்வாலும் இருந்தோம். சிறிது நேரம் அங்கே இருந்திருந்தால், எனக்குப் பதில் வேறொருவர் இங்கு பேசிக் கொண்டு இருந்திருப்பார்’ என்றார்.

ஆபரேட்டர் மீது வழக்கு
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு, மற்றும் பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Tags : shooting ,Indian , 3 workers, killed ,Indian shooting,deceased
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்