×

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது: அரசின் பதில் திருப்தி இல்லாததால் திமுக, காங். இ.யூ.மு.லீ. வெளிநடப்பு

சென்னை: தேசிய மக்கள் தொகை  கணக்கெடுப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் அதை நடத்தக்கூடாது என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசின் பதில் திருப்திகரமாக இல்லாததால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 இந்திய குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கடந்த கூட்டத்தொடரிலே வலியுறுத்தினேன். தங்களுடைய ஆய்வில் இருப்பதாக தெரிவித்தீர்கள்.  இப்போதும் வலியுறுத்துகிறோம். முடியாது என்று மறுத்துவிட்டீர்கள். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று  வலியுறுத்துகிறோம். ஆனால் முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

வருவாய் துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார்: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆவணங்கள் ஏதுமின்றி  நடத்தப்படும். இதில், தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த இடம், பிறந்ததேதி,  செல்போன் எண், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் எண் என 14 விவரங்கள்  கேட்கப்பட்டுள்ளன. இதில், 10, 13, 14 ஆகிய கேள்விகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மதம் குறித்து எந்த விவரமும்  கேட்கப்படவில்லை. புதிதாக சேர்க்கப்பட்ட கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் சில விவரங்கள் கேட்டு தமிழக அரசு கடிதம்  எழுதியுள்ளது. இன்னும் பதில் வரவில்லை.  தமிழகத்தில் தேசிய  மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. சிறுபான்மை  மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் பிறந்த இஸ்லாமிய  மக்களுக்கு எள்ளளவும் பாதிப்பு இருக்காது. 15க்கும் மேற்பட்ட  வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்போது பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. வாக்கு வங்கிக்காக  மக்களை திசை திருப்ப முயற்சி  நடக்கிறது. (அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

சபாநாயகர் தனபால்: அமைச்சர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.  மு.க.ஸ்டாலின்: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், நீங்கள் கொண்டாடும் பண்டிகை எது என்று கேட்கப்படுகிறது. அதில் இஸ்லாமியர் பண்டிகை எதுவும் இல்லை. இது சட்ட விரோதமானது. தேசிய  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்ற உறுதியை அரசு வழங்குமா?அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார்: எதிர்க்கட்சி தலைவர் கூறிய தகவல் எதுவும் தேசிய  மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படவில்லை. இல்லாத  ஒன்றை இருப்பதாக சொன்னால் எப்படி? குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த  பாதிப்பும் வராது. சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. மதச்சார்பற்ற  அரசாக இந்த அரசு விளங்கிவருகிறது. துரைமுருகன் (எதிர்க்கட்சி துணை தலைவர்): தீபாவளி, பொங்கல் என்று சொன்னால் விட்டுவிடுவார்கள். ரம்ஜான், பக்ரீத்  என்று சொன்னால் பிடித்துக்கொள்வார்கள். அசாமில் 19 லட்சம் பேர் அகதிகள்  ஆக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:  அசாமில் நிலைமை வேறு. அங்குள்ள நிலைமை தமிழகத்தில் இல்லை. துரைமுருகன்:  ஜனாதிபதியாக இருந்தவரின் குடும்பத்தினரையே அசாமில் அகதிகள் முகாமில்  வைத்துவிட்டனர். இதனால், இங்குள்ள சமுதாய மக்கள் உயிரையே கையில்  பிடித்துக்கொண்டு பயப்படுகிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.  துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் ரம்ஜான், பக்ரீத்,  பொங்கல், தீபாவளி என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம்.   இவ்வாறு விவாதம் நடந்தது. விவாதம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து, “அமைச்சரின்  பதில் திருப்தி அளிக்காததால், துணை முதல்வரின் பட்ஜெட் மீதான பதிலுரையை  புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து,  மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  இதை கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சிறிது நேரத்தில் வந்து ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.

பாதக அம்சங்களை அகற்றவே தேர்வு குழுவுக்கு அனுப்ப சொன்னோம்
மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அதை நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் திமுக  துணை நிற்கும். நாடாளுமன்றத்திலும் எங்கள் உறுப்பினர்கள் இதற்காக நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என நான் தெளிவாக எடுத்துச் சொன்னேன்.  ஆனால் அந்த சட்ட முன்வடிவில் உள்ள சில சட்டச் சிக்கல்கள், சில சங்கடங்கள், சில இடையூறுகளை எல்லாம் களைவதற்கு, உடனடியாக காவிரி டெல்டா வேளாண் மண்டலப் பகுதியில் இருக்கும் விவசாய பெருங்குடி மக்களைக் கலந்து பேசி, சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு நடத்தி, விவாதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, இதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், அதனைக் கண்டிக்கும் வகையில், நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள் மு.க.ஸ்டாலினிடம்,  துளிகூட அச்சப்படத் தேவையில்லை என சட்டத்துறை அமைச்சர் கூறியிருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர்.  அதற்கு மு.க.ஸ்டாலின், “அவர் சொல்கிறாரே தவிர, அவரது பேச்சை நீங்கள் முழுவதுமாக கேட்டீர்கள் என்றால் தெரியும். சாதக, பாதகம் இருக்கிறது என அவரே சொன்னார். பல இடங்களில் பலமுறை சொல்லி உள்ளார். ஆக அந்த சாதக, பாதகத்தைத்தான் சரி செய்ய வேண்டும். அதை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேர்வுக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறோம்” என்றார்.

Tags : Census ,Kang ,Government ,DMK ,Iyumuli Walkout , National Census, DMK, Congress, IUML, Walk
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...