×

கற்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல் தீருமா? அழிவின் விழிம்பில் மயிலாடி சிற்பங்கள்: கவலையில் தொழிலாளர்கள்

அஞ்சுகிராமம்: தமிழர்களின் கலைத்திறனில் முக்கிய பங்கு வகிப்பது சிற்பக்கலைகள் தான். அந்த வகையில் கல்சிற்ப தொழிலுக்கு பெயர் பெற்ற கிராமமாக மயிலாடி திகழ்கிறது. இங்கு இரவு பகல் பாராமல் சிற்பங்களை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் மயிலாடிக்கு சென்றால் திரும்பிய பக்கமெல்லாமல் உளியின் ஓசையை கேட்கலாம். இந்த தொழிலை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். விநாயகர், சுடலைமாடன், முத்தாரம்மன், ஐயப்பன் என்று சாமி சிலைகள் கற்சிற்ப பட்டறைகளில் கம்பீரமாக செய்து வைக்கப்பட்டுள்ளன. இது தவிர தேச தலைவர்களின் சிலைகளும் நம்மை மிரட்டும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளன. லண்டன் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவில் உள்ள  நடராஜர் சிலை ஆகியவை மயிலாடி மண்ணில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடியில் தயாராகும் சிலைகள் பெரும்பாலும் தமிழகத்தை விட கேரளா, கர்நாடகாவுக்குத்தான் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதே போல் இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த கல்சிற்ப தொழிலுக்கு தற்போது கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிலைகளை செதுக்குவதற்கான கற்கள் தெங்கம் பொத்தையில் இருந்து எடுக்கப்பட்டு வந்தன. கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அங்கிருந்து கற்கள் எடுக்க குமரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சிற்ப தொழிலாளர்கள் இன்று வரை கடும் பாதிப்பில் உள்ளனர். பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். ஆகவே போதிய வருமானம் இல்லாமல் வேறு தொழிலை நாடி சென்று விட்டனர்.

தற்போது மதுரை, நெல்லை மாவட்டம் கருங்குளம், பணகுடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகளில்  இருந்து கற்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வெகு தொலைவில்  இருந்து இவைகளை கொண்டுவர வேண்டி உள்ளதால் செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. இவற்றை பட்டறைகளுக்கு கொண்டு சேர்க்கும் வரையிலும் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால் மயிலாடியில் கல்சிற்ப தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிர கணக்கான குடும்பங்களும் பாதிக்கப்படும் சூழ் நிலை உருவாகி உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிற்ப தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கற்சிற்ப கூட உரிமையாளர் முருகேசன் கூறியது: உலக நாடுகளுக்கு கற்சிற்பங்களை ஏற்றுமதி செய்த மயிலாடி சிற்ப பட்டறைகள் மூடும் நிலைக்கு சென்று விட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து கற்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணமாகும். தற்போது சிற்பங்களை வடிவமைப்பதற்கு போதிய அளவிலான கற்கள் கிடைப்பது இல்லை. வெளி மாவட்டங்களில் கற்கள் எடுத்து வரும் போது பல்வேறு சிக்கல் ஏற்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகமாகிறது. ஆகவே தொழிலாளர்கள் பலர் வாழ்வாரத்தை இழந்து நிற்கின்றனர். ஆகவே குறைந்த விலையில் கற்கள் எளிதாக கிடைக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிவின் விழிப்பில் உள்ள கற்சிற்ப தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : Peacock , Stones, peacock sculptures, workers
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்