×

குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் எதிரொலி; திருவாரூர் கோயிலில் 3 வாயில்கள் அடைப்பு: பக்தர்கள் அவதி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள 3 கோபுர வாசல்களையும் திறந்து விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது. கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் விட்ட வாசல் என 5 கோபுர வாசல் வழிகள் இருந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் இந்த கோயிலில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களை தவிர மீதமுள்ள 3 கோபுர வாசல் கதவுகளும் நேற்று வரையில் முழுமையாக அடைக்கப்பட்டு 5 நாட்களாக திறக்கப்படாததால் வழக்கமாக இந்த கோபுரவாசல் களைப் பயன்படுத்தி வந்த பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் சென்று வரும் வகையில் பூட்டப்பட்டுள்ள கதவுகளை திறந்து விடவேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோ, கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தடியடி சம்பவத்திற்கு பின்னர்  15ம் தேதி முதல் இந்த கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், மேற்கு கோபுர வாசலருகே மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு கருதி போலீசாரின் அறிவுரைப்படி வடக்கு, தெற்கு மற்றும் விட்ட வாசல் கோபுர கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்.

Tags : gates ,Thiruvarur Temple ,Devotees Avadi , Citizenship Amendment Act, Struggle, Thiruvarur, Temple, 3 gates block
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை