×

சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்திய 28 பேருக்கு ரூ.64 லட்சம் அபராதம்: உ.பி அரசு உத்தரவு

லக்னோ: லக்னோவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 64 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்தக்கோரி 28 பேருக்கும் உத்தர பிரதேச மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. லக்னோ, அலிகார் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதற்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி அறிவித்தார். அதன்படி சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

லக்னோவில் கடந்த டிசம்பர் 19ம் தேதி நடந்த போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 46 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு இழப்பீடு தொகையை செலுத்தக்கோரி நோட்டிஸும் அனுப்பட்டது. ஆனால் அவர்களில் 18 பேர் தாங்கள் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை வழங்கினர். இதையடுத்து மீதமுள்ள 28 பேருக்கும் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 64 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை செலுத்தக்கோரி 28 பேருக்கும் உத்தர பிரதேச மாநில வசூல் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், காங்கிரஸை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட 28 பேரும் 64 லட்சம் ரூபாயை 30 நாள்களுக்குள் செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்தவில்லையெனில், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : government ,fight ,protests ,anti-CAA ,UP ,CAA Recovery Notices , CAA, protests , Public Property, Damage, Penalties, UP
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...