×

நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?

வெலிங்டன்: சொந்த மண்ணில் வலிமையாக திகழும் நியூசிலாந்து அணியை, வெலிங்டனில் நாளை துவங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை பெற்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் மீண்டு எழுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் இறங்கியதுமே இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நம்பவே முடியாத வகையில் 5-0 என இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் இந்த மகிழ்ச்சி, அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பதிலுக்கு நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்துக் கொண்டது. டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், ஒருநாள் தொடரில் எதிர்ப்பே இல்லாமல் முழுவதுமாக சரணடைந்து விட்டனர்.

இந்நிலையில் இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை வெலிங்டன் நகரின் பேசின் ரிசர்வ் மைதானத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு துவங்கவுள்ளது. 2வது போட்டி வரும் 29ம் தேதி கிரைஸ்ட்சர்ச் நகரின் ஓவல் மைதானத்தில் துவங்கவுள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வலிமையான அணிகளை, இதுவரை அலட்சியமாக வீழ்த்தி வருகிறது நியூசிலாந்து அணி. கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர்  நடந்த டெஸ்ட் போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், முதலில் பந்துவீசிய அணிகளில் நியூசிலாந்து அணிதான் நம்ப முடியாத வகையில் வெற்றிகளை குவித்துள்ளது. 19 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசி, அவற்றில் 11 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி (வெற்றி சதவீதம் 57.89) பெற்றுள்ளது.

ஆனால் இந்திய அணி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 26 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசியுள்ளது. இதில் 10 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி (வெற்றி சதவீதம் 34.86) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமியின் அசத்தலான வேகப்பந்து வீச்சால், இந்திய கிரிக்கெட் அணி, வலிமையான ஆஸ்திரேலிய அணியை, அண்மையில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் இவர்களுடன், உமேஷ் யாதவும் உள்ளார். விராட் கோஹ்லி தலைமையில் ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா என பேட்டிங் வரிசையும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இளம் வீரர்கள் ரிஷப் பன்ட், நவ்தீப் சைனி, ஹனுமான் விஹாரி என துடிப்பான அணியாக இந்திய அணி காட்சியளிக்கிறது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மட்டுமின்றி, நியூசிலாந்து அணிக்கும் சவாலானதுதான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீல் வாக்னருக்கு பதிலாக மேட் ஹென்றி?
கேன் வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னருக்கு பதில் மேட் ஹென்றி சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. நீல் வாக்னரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்பதால், வாக்னர் அந்த தருணத்தில் மனைவியுடன் இருக்க விரும்புகிறார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போல்ட்டுக்கு அடுத்தபடியாக நம்பிக்கையான பவுலர் நீல் வாக்னர் என்பதால், அவர் அணியில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்துக்கு அது பெரிய இழப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சொந்த மண்ணில் வலிமையான அணி....
* இதுவரை இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 10 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
* இதற்கு முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு நியூசிலாந்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மோதியது. இத்தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.
* இந்தியாவும், நியூசிலாந்தும் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

Tags : Kohli ,squad ,New Zealand ,Test ,team , Kohli-led squad for the first Test in New Zealand
× RELATED காரில் எடுத்து சென்ற ₹1 லட்சம்...