×

தூக்கு தண்டனையை தள்ளிபோட முயற்சியா?: நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம்  தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால்,  தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள்  தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கில்  போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம்  செய்துவருகிறது.

ஆனால், தண்டனையை ரத்து செய்யவும், தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு  முயற்சியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.  உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.
 
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வினய் ஷர்மாவின்  வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். வினய் சர்மா வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை வருகிற சனிக்கிழமை  நாளை மறுநாள் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. ஆனால், தூக்கு தண்டனையை தள்ளிப்போட குற்றவாளிகள் புதிய யுக்தி செய்வதாக கருதப்படுகிறது.

மூத்த சிறை அதிகாரிகள் விளக்கம்:

சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன்  பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும்  தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்  என தெரிவித்துள்ளனர்.


Tags : Vinay Sharma ,lawyer ,Delhi High Court ,convict , Nirbhaya convict Vinay Sharma's plea filed in Delhi High Court
× RELATED மருத்துவப் படிப்பில்...