×

வேலூர் பாகாயம் தனியார் மருத்துவக்கல்லூரி அருகில் சாலையில் கோழிக்கழிவுகள் வீச்சால் மக்கள் அவதி

வேலூர்: வேலூர் மாநகராட்சி தொரப்பாடி பாகாயம் சாலையில் இறைச்சிக்கழிவுகள் மூட்டை, மூட்டையாக கட்டி வீசப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள துர்நாற்றம் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டின் பிடியிலும், துர்நாற்றத்தின் பிடியிலும் சிக்கி தவிக்கின்றனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் 200 டன்கள் வரை குப்பைகள் மாநகராட்சியால் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் எருவாகவும், மக்காக பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்கும் பயன்படுகின்றன.

ஆபத்தான எலக்ட்ரானிக் கழிவுகளுக்காக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. குப்பைகளை பொறுத்தவரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாகவும், வணிக வளாகங்களிலும் சேகரித்து செல்கின்றனர்.ஆனாலும் வியாபாரிகள் சிலர் ஒட்டுமொத்தமாக  தங்கள் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்குவதை விட தாங்களாகவே தீயிட்டு அழித்து விடுகின்றனர் அல்லது சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர்.இதனால் அவை எரிக்கப்படும் பகுதில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேட்டிலும் அப்பகுதி மக்களை தள்ளி விடுகிறது.
 
குறிப்பாக தொரப்பாடி- பாகாயம் சாலையில் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மற்றும் சிவநாதபுரம் அருகிலும் தொரப்பாடி பகுதியை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கோழி இறைச்சி கழிவுகளை நாள்தோறும் வீசிவிட்டு செல்கின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘அதிகாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் தொரப்பாடியை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் இறைச்சி கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து இங்கு வீசுகின்றனர். இவற்றை தெரு நாய்களும், காக்கைகளும் கிளறி சாலை முழுவதும் சிதறடித்து செல்கின்றன.

இதனால் சாலையில் நடமாடவே முடியவில்லை. துர்நாற்றமும், ஈக்களும் எங்களை அலைக்கழிப்பதுடன், சுகாதார சீர்கேட்டிலும் எங்கள் பகுதியை சிக்க வைத்துள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு சாலையில் இறைச்சி கழிவுகளை வீசிச் செல்லும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இறைச்சி கழிவுகளை வீசி செல்லும் அடாவடி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore Bayayam Private Hospital Vellore Bayayam Private Hospital , Vellore Bayayam ,Private, Hospital
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...