×

குழாய்கள் பதிக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவு புத்தன் அணை குடிநீர் திட்டம் டிசம்பரில் முடியும்: ஜூன் மாதம் பில்டர் ஹவுசுக்கு தண்ணீர்

நாகர்கோவில்: புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் கோடை காலத்தில் தண்ணீர் மைனஸ் அளவுக்கும் கீழ் சென்று விடும். அந்த சமயங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அனந்தனார் சானலில் பம்பிங் செய்து மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தின் விவசாயத்தின் உயிர்நாடியாக உள்ள பேச்சிப்பாறை அணை தண்ணீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாநகர மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

இதனால் முக்கடல் அணை தண்ணீர் போதுமானதாக இல்லை. ஏற்கனவே மாநகரில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் குடிநீர் தேவை அதிகரித்து பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படும். எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதில் குலசேகரம் அருகே உள்ள புத்தன் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு  செய்யப்பட்டது. அதன்படி புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. சுமார் ரூ.250 கோடியில்  இந்த திட்ட பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.  2020 ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிவடைந்து, குடிநீர் சப்ளை நடைபெற வேண்டும் என்பது திட்ட விதிமுறை ஆகும். ஆனால் இன்னும் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏற்கனவே தோண்டப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் இன்னும் சீரமைக்கப்பட வில்லை.

இந்த திட்டப்படி, புத்தன் அணையில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய் மூலம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான மொத்த தூரம் சுமார் 31 கி.மீ. ஆகும். இதற்காக பாலமோர் ரோட்டில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இது தவிர நாகர்கோவில் மாநகரில் 2 லட்சம் லிட்டர் முதல் சுமார் 9 லட்சம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 11 நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். நாகர்கோவில் மாநகருக்குள் 420 கி.மீ. தூரத்துக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். மேலும் தற்போது உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 12 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு பில்டர் ஹவுஸ் கட்ட வேண்டும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு எப்போது வரும்? என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, நிச்சயம் 2020 டிசம்பருக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என கூறினர்.

புத்தன் அணையில் இருந்து, கிருஷ்ணன்கோவில் குடிநீர்  சுத்திகரிப்பு நிலையம் வரையிலான 31 கி.மீ. தூரத்தில் 26 கி.மீ. தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. அழகியபாண்டிபுரம் பகுதியில் பாறைகள் இருப்பதால் சுமார் ஒன்றரை கி.மீ. தூர பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதே போல் புத்தேரி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ், சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். கிடப்பில் உள்ள சுமார் 5 கி.மீ. தூர பணிகளை முடித்தால், புத்தன் அணை முதல் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதே போல் நாகர்கோவில் மாநகருக்குள் 420 கி.மீ. தூரம் தண்ணீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். இதில் சுமார் 200 கி.மீ. தூரம் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் 220 கி.மீ. தூரத்துக்கு தான் பணிகள் நடக்க வேண்டும். இதில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் அடங்கும் என்றும் கூறிய அதிகாரிகள், புதிதாக கட்டப்படும் 11 நீர்தேக்க தொட்டிகளில், 4 நீர்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மற்ற நீர்தேக்க தொட்டிகள் 70 முதல் 75 சதவீதம் வரை பணிகள் முடிவடைந்துள்ளன. 2020 டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

இதில் வருகிற ஜூன் மாதத்துக்குள் புத்தன் அணை முதல் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, அணையில் இருந்து பில்டர் ஹவுசுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பருக்குள் முடிவடைய பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பில்டர் ஹவுசில் நடக்கும் முக்கிய பணிகள்
குடிநீர் திட்ட பணிக்காக, கிருஷ்ணன்கோவில் பில்டர் ஹவுசில் ஏர் ரேட்டர் (காற்று சுத்திகரிப்பு) அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீர், இந்த ஏர் ரேட்டரை அடையும். இதில் நீரில் உள்ள இரும்பு சத்து பிரிக்கப்பட்டு படிமமாக கீழ் பகுதியில் சேரிக்கப்படும். பின்னர் தண்ணீர், நீர் தேக்கி (ஸ்டீலிங் சேம்பர்) மூலம் தொட்டிகளுக்கு சப்ளை ஆகும். நீரின் அளவீடு கால்வாய் (மெமரி சானல்) அமைக்கப்பட்டு பிரத்யேக கருவிகள் பொருத்தப்படும். இதில்  வினாடிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு நீர் வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு நீர், ஒரு நாளைக்கு எவ்வளவு நீர், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கு எவ்வளவு நீர் என்பதை கணக்கீடு செய்ய முடியும். சுத்திகரிப்பு பணிக்காக 7 தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

இதில் 4 தொட்டிகள் பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். 12 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது. இது தவிர 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொட்டிகளில் அதிக குதிரை திறன் கூடிய, 3 செட் கொண்ட டர்பைன் பம்பு செட் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த குடிநீர் திட்டத்துக்காக வடக்கு சூரங்குடியில் 1.1 லட்சம் லிட்டர் கொள்ளளவு, ஞானம் நகர் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு, கரியமாணிக்கபுரம் 2.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு, என்.ஜி.ஓ. காலனி 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசீர்வாத நகர் 2.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு, நேசமணி நகர் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு, ஆசாரிப்பள்ளம் 8.8 லட்சம் லிட்டர் கொள்ளளவு, பொன்னப்ப நாடார் காலனி 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு, வி.என். காலனி 9.1 லட்சம் லிட்டர் ெகாள்ளளவு, கோட்டார் எஸ்.எல்.பி. பள்ளி 8.8 லட்சம் லிட்டர் கொள்ளளவு, கிருஷ்ணன்கோவில் 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் 70 முதல் 75 சதவீதம் வரை முடிவடைந்துள்ளன.

Tags : completion ,Buddha Dam ,house ,builder ,Builder House , 50 percent completion,pumping works ,ddha Dam drinking wa, December,Water to the Builder House
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா