×

பக்கிள்ஓடை கழிவுகளை அகற்றாததால் திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் உருவான மணல் திட்டுகள்: படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவிப்பு

தூத்துக்குடி:  தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பக்கிள்ஓடை சங்கமிக்கும் முகத்துவாரத்தில் கழிவுகள் தேங்கி மணல்திட்டுகள் ஏற்பட்டுள்ளதால் கடலுக்குள் படகுகளை செலுத்த முடியாமல் மீனவர்கள் சிரமப்படுகின்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையை தங்கு தளமாக கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் பக்கிள்ஓடை கால்வாய் கழிவுநீர் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் மாவட்ட நிர்வாகம் தன்னிறைவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேவையில்லாத பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கால்வாய் குறுக்கே வலை கட்டப்பட்டிருந்தது. இந்த வலை நாளடைவில் பராமரிப்பின்றி அறுந்து கடல் நீரில் காணாமல் போனது.

தற்போது பக்கிள்ஓடை கால்வாயில் கழிவுகள் நிரம்பி மண்மேடாக காட்சியளிக்கிறது.  இதனால் பக்கிள்ஓடை கால்வாயில் சேரும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஓரிடத்திலேயே குட்டையாக தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மறுபுறம் கால்வாயில் இருந்து அதிகப்படியான மண் வெளியேறியதால் கடலின் ஆழம் குறைந்து படகுகள் தரைதட்டி நிற்கிறது. இதுகுறித்து மீனவர் இசக்கிமுத்து கூறுகையில், இங்குள்ள மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்று வருவதற்கு திரேஸ்புரம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்ேபாது படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் தளத்தில் மண் நிறைந்து கடலின் ஆழம் குறைந்துள்ளதால் படகுகள் தரைதட்டி நிற்கின்றன. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் மண்மேடாகி கடல் முகத்துவாரம் சகதி நிறைந்திருப்பதால் கால்வாய் மூலம் கடலில் கலந்திருக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள் படகு மோட்டார்களில் சுற்றி படகின் அவுட்போர்டு இன்ஜின், புரொபல்லர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றன.

மேலும் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிலை நிறுத்துவதற்கு இங்கு எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. இதனால் படகுகள் கரையில் மோதி சேதமடைகின்றன. எனவே படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தருவதுடன் பக்கிள்ஓடை கழிமுக கால்வாயை தூர்வாரி, கடலின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இதேபோல் சிந்தா யாத்திரை மாதா பைபர் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கத்தினர் தலைவர் ஆல்ரின் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கழிமுகத்துவார மணல் திட்டு பகுதியில் கடலுக்கு சென்று திரும்புகையில் படகுகளின் அடிப்பாகம் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மணல்மேட்டை தூர்வாரி ஆழப்படுத்தி, மீனவர்களுக்கு வசதியாக ஒரு பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sand dunes ,fishermen ,Threspuram ,beach estuary ,sea ,The Sand Dunes , sand dunes,Threspuram beach , bucky-laden waste,not disposed
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...