×

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 39ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு

சிதம்பரம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 39ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. இதில் ஏராளமான நடன கலைஞர்கள் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் உலகம் முழுவதிலும் உள்ள நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடுவர். இந்த ஆண்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் 39ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த இவ்விழாவில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசன், என்எல்சி நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நாட்டியாஞ்சலி விழாவை துவக்கி வைத்து பேசினர்.

முதலில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் புதுதில்லியைச் சேர்ந்த காயத்ரி ஜெயராமனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அமெரிக்காவின் மதுரா விசுவநாதனை ஆசிரியராகக் கொண்ட கலாதாரா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.இதைத்தொடர்ந்து தசாவதாரம் என்ற நாட்டிய நாடகம் நடந்தது. நிருத்ய சங்கீத அகாடமி சார்பில் ராதிகா ராஜலோகநாதன் குழுவினர் பங்கேற்று சிறப்பாக தசாவதார நாட்டிய நாடகத்தை மக்கள் முன்னே நிகழ்த்திக் காண்பித்தனர். இது பார்வையாளர்களை பெரிதும் பரவசப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பரதம், குச்சுப்புடி, ஒடிசி உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று துவங்கிய இந்த நாட்டியாஞ்சலி விழா வரும் 23ம் தேதி வரை 5 தினங்களுக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் சம்மந்தம், முத்துக்குமரன், நடராஜன், பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags : 39th Natyanjali Festival ,dancers ,Natyanjali Foundation , 39th Natyanjali Festival,started , behalf , Natyanjali Foundation
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்