×

அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே 60கேஜ் கொண்ட புதிய தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மாற்றும் பணி தொடக்கம்': 180 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை

வேலூர்: அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே 60கேஜ்  கொண்ட புதிய தண்டவாளங்கள் மற்றும் ஸ்லீப்பர்கள் மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 180கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவதற்காக  பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே துறை முக்கிய இடம் பிடித்துள்ளது. ரயில்வே துறையில் நிர்வாகம், வணிகம், சிக்னல் பிரிவு, ரயில் போக்குவரத்து மேலாண்மை,  மின்சாரம், தண்டவாளம் பராமரிப்பு, பாதுகாப்பு உட்பட பல்வேறு நிலைகளில் சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 63ஆயிரத்து 140 கி.மீ தூரத்திற்கு தண்டவாள இருப்புப்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.விரைவு, அதிவிரைவு, வாரந்திர சிறப்பு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், சரக்கு ரயில்கள் என சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.  ஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் கையாளப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் மூலமாக கிடைக்கும் வருவாய் நாட்டின் வளர்ச்சிக்கும், ரயில்வே துறையில் பயணிகளுக்கான சேவையை நவீனப்படுத்துவதற்கும் செலவிடப்படுகிறது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, அனைத்து முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களிலும் இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட், பேட்டரி கார், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், ரயில்கள் விவரம் அறிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கோச் பொசிஷன் போர்ட், நவீன பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சிறிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் நீட்டிப்பு மற்றும் உயரம் அதிகரித்தல், நடைமேம்பாலம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சிக்னல் கோளாறு, தண்டவாளம் விரிசல், ரயில்களுக்கு வழிவிடுதல், தாமதாக இயக்குதல் போன்ற காரணங்களால் ரயில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ரயில் தாமதத்தை தவிர்க்கவும், குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கும் வகையிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வேதுறை முடிவு செய்தது. தற்போது ராஜ்தானி, சதாப்தி அதிவிரைவு ரயில்கள் மட்டுமே 160கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக மற்ற விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடாக ரயில்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக ரயில்வே இருப்புப்பாதையில் உள்ள தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர்கள் ஆகியவற்றை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 52கேஜ் தண்டவாளங்கள் 52கேஜ் ஸ்லீப்பர்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் வேகத்தை 160கி.மீட்டரில் இருந்து 180கி.மீட்டருக்கு அதிகரிக்கப்பட உள்ளது. ரயில்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள ரயில்வே இருப்புப்பாதையின் தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர்கள் ஆகியவை 60கேஜுக்கு மாற்றப்பட உள்ளது.

தென்னக ரயில்வேயில் முதற்கட்டமாக அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே புதிய தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர்கள் புதிதாக மாற்றும் பணி டிராக் ரிலேயிங் இயந்திரத்தின் உதவியுடன் வேகமாக நடந்து வருகிறது. இந்த ஸ்லீப்பர்கள் நிலையான உறுதிதன்மை கொண்டது. இவை தண்டவாளம் பிரளுவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளம்-ஸ்லீப்பர்கள் இடையே அதிகமான அழுத்தத்தை தாங்கும் வகையில் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட ரப்பர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரயில்களை 180கி.மீ வேகத்தில் எளிதாகவும் மிகவும் பாதுகாப்பான வகையிலும் இயக்க முடியும். புதிய தண்டவாளம் மற்றும் ஸ்லீப்பர்கள் அமைக்கும் பணி பகுதி வாரியாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.


Tags : Arakkonam ,sleepers , Arakkonam,new gauge rails,60 gauge ,Ranikunda, sleepers, work
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...