×

ராஜபாளையம் அருகே நிலத்தகராறில் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நிலத்தகராறில் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் அமைந்துள்ள கொசவன்குளம் கண்மாய் கரையில் ஆலமரத்தடியில் முனீஸ்வரன், காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் இந்த கோயிலில் அனைத்து சமுதாயத்தைத் சேர்ந்த மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.சுந்தரராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் குடும்பத்தினர் வழி வழியாக பூஜை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் உறுப்பினராக இருக்கும் குணசேகரன் மகன் வீரசுந்தரலிங்கம் (27) பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, இந்து அறநிலைய துறையில் இருந்து மாதம் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோயில் அருகே உள்ள விவசாய நிலத்தை பராமரித்து வரும், கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கலைசெல்வம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் இப் பகுதியில் உள்ள நிலம் முழுவதையும் வாங்கி உள்ளதாகவும், கோயில் அமைந்துள்ள இடம் தன்னுடைய பட்டாவின் கீழ் வருவதால் கோயிலை காலி செய்து தரும்படி பூசாரி வீர சுந்தரலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வீர சுந்தரலிங்கம் கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, கோயில் இருக்கும் நிலம் அரசு புறம்போக்கு இடம் என தெரிய வந்தது. இதுகுறித்த வரைபடத்தை காட்டி இடத்தை காலி செய்ய முடியாது என பூசாரி கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கோயில் சுற்று பிரகாரத்தில் இருந்த விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் கருப்பசாமி ஆகிய 3 சிலைகளை பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து அருகே உள்ள விவசாய நிலத்தில் வீசியுள்ளனர்.மேலும் முனீஸ்வரன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து நேற்று காலை கோயிலுக்கு சென்ற பூசாரி வீர சுந்தரலிங்கத்திற்கு தெரிய வந்தது. இது குறித்து பூசாரி சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிலப் பிரச்னை காரணமாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப் பட்ட சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rajapalayam ,Nilakkatharar ,temple statues ,Mysterious People , Mysterious people,damaged, temple statues ,Nilakkatharar , Rajapalayam
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!