×

குரூப் 2 ஏ முறைகேடு: 2வது முறையாக ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்துகிறது சிபிசிஐடி

ராமநாதபுரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ஓம்காந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது  இரண்டு பேரையும் ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகிய இருவரையும் இன்று காலை 11 மணிக்கு ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. குரூப் 4 முறைகேட்டில் இதுவரை கிட்டத்தட்ட 20 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 22  பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் போலீஸ் காவலில் ஒருவாரம் விசாரணை நடைபெற்றது.

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இவர்களை ஏற்கனவே ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் விசாரணை நடத்துவதற்காக நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் 6 நாள் காவல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோர் நேற்று இரவு முழுவதும் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் குரூப் 2 ஏ முறைகேடு பற்றி விசாரணை நடத்த ஜெயக்குமார், ஓம்காந்தனை மீண்டும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே குரூப் 4 முறைகேட்டில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்களின் பெயர்களை இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறைகேட்டிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் குரூப் 2 ஏ முறைகேடு தொடர்பாக சில முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 2வது முறையாக ராமநாதபுரம் அழைத்து சென்று சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Tags : Ramanathapuram ,Jayakumar ,CBCID , Group 2A abuse, investigation, Jayakumar, Omkandan, Ramanathapuram, CBCID
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...