×

தன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா கொலை குற்றவாளி வினய் ஷர்மா: தூக்கு தண்டனையை தள்ளிப்போட புதிய யுக்தி?

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனையை தள்ளிப் போடுவதற்காக குற்றவாளி வினய் ஷர்மா தன்னை தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது. ஆனால், தண்டனையை ரத்து செய்யவும், தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு முயற்சியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.

இதற்கு முன்னரும், சிறையில் உள்ள கிரில்லில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அங்கு வந்த வினய்யின் தாய் கேட்ட போதும், அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை எனவும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய தேதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சட்டரீதியான அனைத்து முயற்சிகளும் கைகொடுக்காத நிலையில், தூக்கில் போடுவதை தாமதப்படுத்துவதற்காக வினய் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நல்ல உடல்நலத்துடன் இருந்தால் மட்டுமே கைதி தூக்கிலிடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Vinay Sharma: Nirbhaya ,murder convict ,Vinay Sharma , Nirbhaya case, Vinay Sharma, Tihar jail, hanging, injury
× RELATED ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி...