×

தமிழகத்தில் எஸ்.ஐ தேர்வில் ஊழல்?: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சிறப்பு செய்தி: தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 12 ,13 தேதிகளில் நடத்தியது. 12ம் தேதி நடந்த பொது பிரிவுக்கான தேர்வு மிகவும் கடினமாக இருந்து. இதைத் தொடர்ந்து 13ம்  தேதி நடைபெற்ற காவல் துறையினர்களுக்கான 20%  இட ஒதுக்கீட்டிற்கான 32 மாவட்டங்களில் நடைபெற்றது.எஸ்.ஐ. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செல்போன், எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், 13ம் தேதி தேர்வு எழுதிய காவலர்களுக்கு அனைத்து சலுகைகளும்  அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் காவலராக பணியாற்றியவர்கள் எஸ்.ஐ.  தேர்வு எழுதினர். ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இவர்கள் எஸ்ஐ தேர்வுக்காக விண்ணப்பிக்கும்போது ஆன்லைன் மூலமாக அதற்கான குறுக்கு வழிகளை கையாண்டுள்ளது மிக எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. இரவு பதினொரு மணிக்கு மேல் ஆன்லைனில் எஸ்ஐ தேர்வுக்காக விண்ணப்பம்  செலுத்தும்போது  அடுத்தடுத்து விண்ணப்பங்களை செலுத்தி ஒரே சென்டர் ஒரே வகுப்பறையில் குழுவாக தேர்வு எழுதுவதை கையாண்டுள்ளனர்.

பதினோரு மணிக்கு ஒருவர்  விண்ணப்பம் செலுத்தினார் என்றால் அவர் செலுத்தி முடிந்தவுடன் 11 ஒன்றுக்கு மற்றொருவர் 11 இரண்டுக்கு மூன்றாவது நபர் என பத்து பேர் சேர்ந்து தொடர்ந்து விண்ணப்பங்களை ஒரே நேரத்தில் செலுத்தி ஒரே  சென்டர் ஒரே வகுப்பறையில் தேர்வு எழுதியுள்ளனர்.  இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப்பிரிவை பிரித்துக் கொண்டனர். எஸ்ஐ தேர்வில் இந்திய தண்டனைச் சட்டம். குற்ற விசாரணை முறை சட்டம். இந்திய சாட்சிய சட்டம்.  காவல் நிலைய ஆணை. பொதுஅறிவு  உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வருகின்றன . இவற்றை அனைத்தையும் ஒருவரே படித்து முடித்து தேர்ச்சி பெறுவது கடினம்  என்பதால் ஒவ்வொரு பாடப் பிரிவும் ஒவ்வொரு மாணவர்கள் தனித்தனியாக படித்து ஒரே வகுப்பறையில் அமர்ந்து தேர்வு  எழுதும் பொழுது தங்களது விடைகளை பரிமாறிக்கொண்டனர். இதை சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வில் கண்கூடாக காண முடிந்தது. மேலும் இந்த சென்டரில் செல்போன் மூலம் வினாத்தாளை படம் எடுத்து அனுப்பி வெளியில் இருந்து மாணவர்கள் அதற்கு  உரிய பதிலை கூற  பல பேர்  எழுதியுள்ளனர்.  வேலூரில் நடந்த தேர்வின் 103 மற்றும் 104 ரூம்களில் மாணவர்கள் புத்தகத்தை வைத்து தேர்வு எழுதி உள்ளனர். மேலும் ஜன்னல் வழியாக தேர்வுக்கு வராதவர்கள் விடைத்தாள்களை கொடுத்து அவரது நண்பர்கள் எழுதிக்கொடுத்து சம்பவம்  நடைபெற்றுள்ளது . இதற்கு  ஒரு குறிப்பிட்ட தேர்வு மையம் நடத்தும் அதிகாரி உடந்தையாக இருந்துள்ளார் .  இதுபோக சேலத்திலும் அதிகப்படியான முறைகேடுகள் நடந்துள்ளன.

தமிழ்நாடு முழுக்க முறைகேடுகள் நடந்திருந்தாலும் குறிப்பாக சென்னை, சேலம்,  வேலூர் இந்த மூன்று மையங்களில்  மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெறக்கூடும் என்பது முன்கூட்டியே தெரியவந்துள்ளது. தேர்வு எழுதும் அனைவரும்  ஏற்கனவே போலீஸ் வேலையில் உள்ளதாலும் தேர்வை வழி நடத்தும்  சூபர்வைசர்களும்  அதிகாரிகளும் போலீஸ் என்பதால் எந்தவித பிரச்னையுமின்றி காவலர்களை தேர்வெழுத விட்டுவிட்டனர் என்கிறது ஒரு தரப்பு.இதுகுறித்து சென்னையில் தேர்வு எழுதிய காவலர் ஒருவர் கூறுகையில், கடைசியாக 2015ம்   ஆண்டு தேர்வு எழுதினேன். அதிலும் பல முறைகேடுகள் நடைபெற்றது. இந்த முறையாவது நேர்மையாக தேர்வு நடக்கும் என்று எதிர்பார்த்து  வந்தேன். ஆனால் உள்ளே நடப்பதை பார்த்தால் கண்டிப்பாக என்னை விட அதிகமானவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்று தெரிகிறது.  அந்தளவிற்கு புத்தகத்தையும் செல்போனையும் பார்த்து தேர்வு எழுதினர்.  ஒவ்வொரு தேர்வு  மையத்திற்கும்  ஒரு கூடுதல் துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் தலைமையில் தேர்வுகள்  நடைபெறுகிறது.ஆனால் அவர் தேர்வு மையத்திற்குள் வந்தாரா என்பதே தெரியவில்லை. மாணவர்கள் பேசிக்கொண்டு குழு குழுவாக  அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். பொதுமக்களிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என கூறிக்கொள்ளும் காவலர்களே இவ்வாறு ஒரு இழிவான செயல்களை செய்கின்றனர். அதற்கு உயர் அதிகாரிகளும் துணை போகின்றனர்.

எனவே இந்தப் போக்கு மாறவேண்டும் காவல்துறை நடத்தும் தேர்வுகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் நடத்தக்கூடாது. கல்வியாளர்கள் அல்லது நீதிபதியின் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றால்தான்  வருங்காலங்களில் என்னைப் போன்ற நபர்களுக்கு  நியாயம் கிடைக்கும். எனவே தற்போது நடைபெற்ற தேர்வுகளை ரத்துசெய்து சிபிஐ விசாரணை வைக்க வேண்டும். அப்போதுதான் விண்ணப்பம் போட்டது முதல் தேர்வு மையத்தில்  நடைபெற்ற  முறைகேடுகள் வரை அனைத்து உண்மைகளும் வெளிவரும்.காவல்துறை சார்பில் விசாரணை நடத்தினால் கண்டிப்பாக அது அவர்களைக் காப்பாற்றுவதாக இருக்கும் என வேதனையுடன் தெரிவித்தார். ஊருக்கு மட்டும்தான் உபதேசம் போலும். தங்களுக்கு அல்ல என்பதுபோல் காவல்துறையினர்  நடவடிக்கை உள்ளது.

கண்டு கொள்ளாத காவல்துறை
சென்னை மதுரவாயலில் உள்ள தேர்வு மையத்தில்  தேர்வு எழுதிய நபர்களில் தேர்வு எண்  0151**5 என்ற நபர் தேர்வு எழுதும் பொழுது இரண்டு மணி நேரம் முழுவதும் செல்போன் மூலம் பார்த்து தேர்வு எழுதியுள்ளார். இவர் பிடிபட்ட  நிலையிலும் இவரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இவரது வகுப்பறையில் தேர்வு எழுதிய அனைவருக்கும் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியும்

Tags : Tamil Nadu , SI exam, corruption , Tamil Nadu?
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...