×

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டசபையில் இன்று அறிவிக்க திட்டம்?: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கடந்த 9ம் தேதி சேலத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கூறி இருந்தார். இதற்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.இதுபற்றி திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று பேசும்போது, “காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் கடந்த 9ம் தேதி  அறிவித்தார். அதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் தீர்மானமான கொண்டு வர வேண்டும். அதேநேரம், காவிரி டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து இனிமேல் அது தொடர்பான புதிய திட்டங்கள் எதுவும்  வராத வகையில் சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி, “இது சம்பந்தமாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்”  என்றார். அதேநேரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள்,  தலைமை செயலாளர், முக்கிய துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில்  வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்க நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான சட்ட முன்வடிவை இன்று காலை  சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்து, அனைத்துக்கட்சியினர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டால் தற்போது  மத்திய அரசு ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது. இதனால் மத்திய அரசுடன் மோதல் போக்கு ஏற்படும். இதுபோன்ற சட்ட பிரச்னைகள் ஏற்பட்டால், அதை  சமாளிக்க முதல்வர் தலைமையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் சில பகுதிகளில் விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டமும் நிறைவேற்ற முடியாது  என்பது குறிப்பிட்டத்தக்கது.

அமைச்சர்களுக்கு அட்வைஸ்
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து விவாதம் முடிவடைந்ததும், ஒரு சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி விரிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர்கள்  ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்கள் தமிழக அரசின் நல்ல திட்டங்களை எடுத்துக் கூறும்போது தேவையில்லாத சில கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். பிறகு, ஊடகங்களில் நல்ல செய்திகள் வராமல், அவர்கள்  தெரிவிக்கும் தேவையில்லாத கருத்துக்கள்தான் பெரிதுபடுத்தப்படுகிறது. அதனால் பத்திரிகை, ஊடகங்களிடம் அமைச்சர்கள்பேட்டி அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும், தேவைப்பட்டால் மட்டுமே சுருக்கமாக கருத்துக்களை தெரிவிக்க  வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அட்வைஸ் செய்துள்ளார்.

Tags : districts ,zones ,Cauvery Delta ,Tamil Nadu ,Cauvery Delta Districts , Cauvery Delta, Districts, agricultural zone,Assembly today?
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை