×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு சலுகைகள்: ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை:  110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை, ‘‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’’ அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் நினைவை சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின்  நல்வாழ்விற்கான ஐந்து புதிய திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது.

* அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.
* 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். அப்பெண்களுக்கு 50 வயது  நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு,  வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம்  வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
* குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.
* அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் இயங்கும், சமூக நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை மற்றும்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத ‘ஊ’ மற்றும் ‘னு’ பிரிவு பணியிடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப,  முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதைத் தவிர, சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கான அறிவிப்பு:
* தமிழ்நாட்டில் உள்ள வக்ப் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறிய நிலையில் உள்ள பேஷ் இமாம், மோதினார், அரபி ஆசிரியர் மற்றும் முஜாவர் ஆகிய உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,500  ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* ஹஜ் பயணிகள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி கடவுச்சீட்டு, பயண உடமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ஒரு  ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டப்படும்.
* தமிழ்நாடு வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Tags : Jayalalithaa ,girls ,Chief Minister ,CM , former, CM Jayalalithaa, Chief Minister,announcement
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை