×

பேரவை துளிகள்...

ஆண்களுக்கும் கருத்தடை
வேடசந்தூர் பரமசிவம் (அதிமுக): ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?. (அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.)சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆண்களுக்கும் கத்தியின்றி ரத்தமின்றி, எவ்வித தழும்புமின்றி, இரண்டு மணி நேரத்தில்  கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 2018ம் ஆண்டு 80 ஆண்களுக்கும், 2019ம் ஆண்டு 800 ஆண்களுக்கும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை  சிகிச்சை செய்ய தயாராக உள்ளோம். ஆண்களும் கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள முன் வர வேண்டும்.

பயிர் காப்பீட்டில் குளறுபடியா?
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி : பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பலர் விடுபட்டுள்ளனர்.அமைச்சர் துரைக்கண்ணு: விவசாயிகள் யாரும் விடுபடவில்லை. காப்பீடு வராமல் இருந்து இருக்கலாம். 1 சதவீதம் பேருக்குதான் பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை.அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: ஒரே நபர் காப்பீடு பெற கூட்டுறவு சங்கங்கள் மூலம் பிரீமியம் செலுத்துகின்றனர். தேசிய வங்கிகளில் பிரீமியம் செலுத்துகின்றனர். அவர்கள் இரண்டு வங்கிகளில் காப்பீடு பெற முயற்சிக்கின்றனர். அது தவறு.  இதுபோன்று எங்களது மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் தவறு நடந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த இன்சூரன்ஸ் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது.முதல்வர் எடப்பாடி: விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு கிடைக்கவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். அதை ஆய்வு செய்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய நிதி வருமா?
சட்டப்பேரவை  காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி : மத்திய அரசு ரூ.74340 கோடி தர  வேண்டியிருப்பதாக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மத்திய அரசு  ரூ.30 ஆயிரம் கோடி தான் தந்துள்ளது. அவர்களிடம் நெருக்கமாக  இருந்தும்  வாங்காமல் இருப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகம்.துணை முதல்வர் ஓ.பன்னீர்  செல்வம்: தமிழகத்துக்கு நிதி கேட்டு முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.  நேரில் செல்லும் போது வலியுறுத்தியுள்ளார். நிதித்துறை செயலாளரும் நேரில்  சென்று வலியுறுத்தியுள்ளார். நிதி தருகிறோம்  என்று கூறியுள்ளனர். 14வது  நிதிகுழுமம் பிரச்னை உள்ளது. அதில் குறைக்கப்பட்டுள்ள பங்கை கேட்டுள்ளோம்.  நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த நிதி வந்து சேரும்.

சோலார் மின்சாரத்துக்கு சலுகை
மேட்டூர்  செம்மலை (அதிமுக) பேசும்போது, சோலார் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி  மேற்கொண்டால் மின் பகிர்மான கழகத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக  இருக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தின் தற்போதைய நிலை  என்ன என்றும்  கேள்வி எழுப்பினார்.மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி: மத்திய, மாநில  அரசுகள் பங்களிப்புடன் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய  அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு  வருகிறது. முதற்கட்டமாக 20  ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் மூலமாக விவசாயிகள் மின்சார உற்பத்தி  செய்வதை ஊக்குவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவும்.

Tags : Drop,down ...
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...