ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக சாமியார் தேர்வு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவராக சாமியார் நிருத்ய கோபால் தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 16ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,  ‘‘அயோத்தியில்  பிரமாண்ட ராமர் கோயில் கட்ட ‘ஸ்ரீ ராம்ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா’ என்ற  அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை விரைவாக செயல்படும்.  ராமர் கோயில் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கப்படும்’’ என கூறினார்.

இந்நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள மூத்த வக்கீல் பராசரண் வீட்டில் நேற்று நடந்தது. இதில் ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக அயோத்தியைச் சேர்ந்த சாமியார் நிருத்ய கோபால் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக சம்பத் ராய் தேர்வு செய்யப்பட்டார். புனேயைச் சேர்ந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி, பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார். ராமர் கோயில் கட்டுமான குழு தலைவராக, பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை வசூலிக்க அயோத்தியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தனி கணக்கு தொடங்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மத்திய, உ.பி அரசு பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

Related Stories: