×

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் : ராம்நகரம் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சாமியார் நித்யானந்தாவுக்கு  வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ராம்நகர நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்  பிறப்பித்துள்ளது. சாமியார் நித்யானந்தா மீது பாலியல்  பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு  வழக்குகள், பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான  வழக்கு ராம்நகரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்குகளில்  நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கும்படி நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதி, அவருக்கு விலக்கு அளித்தார். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் நித்யானந்தா  ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில்  தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை  ரத்து செய்யும்படி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்ற நீதிபதி  மைக்கேல் டி குன்ஹா, நித்யானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து  கடந்த 5ம் தேதி உத்தரவிட்டார். மேலும், ராம்நகர்  நீதிமன்றத்தில் பிப்ரவரி 19ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது  நித்யானந்தாவும், அவருக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்தவர்களும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், நித்யானந்தாவுக்கு  எதிரான வழக்கு ராம்நகரம் மாவட்ட 3வது அமர்வு நீதிமன்றத்தில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மற்றும் ெலனின் கருப்பன் சார்பில் ஆஜரான  வக்கீல்கள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகலை நீதிபதியிடம் கொடுத்தனர். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நித்யானந்தா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
அதை பரிசீலனை செய்த  நீதிபதி, வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்காக நித்யானந்தாவுக்கு வழங்கிய விலக்கை ரத்து செய்தார். மேலும், விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்ததால்  அவருக்கு ஜாமீனில் விடுதலையாக முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து, வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Tags : Nithyananda ,Ramnagaram , Warrant issued , Nithyananda's bail, Ramnagaram court order
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...