×

மிக குறைந்த சல்பர் அளவுடன் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1 முதல் விற்பனை: எண்ணெய் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: தரம் உயர்த்தப்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் அன்றைய தினம் முதல் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.  வாகன மாசுவை குறைக்கும் வகையில் சர்வதேச தர நிலைக்கு ஏற்ப பிஎஸ் 6 தர வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  எனவே, பிஎஸ் 6 ரக எரிபொருட்கள் விற்பனையும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் துவக்க வேண்டும். இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) தலைவர் சஞ்சீவ் சிங் கூறியதாவது:   எரிபொருள் சந்தையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பங்களிப்பு ஏறக்குறைய 50 சதவீதமாக உள்ளது. பிஎஸ்6 தர நிலை இன்ஜின்களுக்கான பெட்ரோல், டீசலில் சல்பர் அளவு மிக மிக குறைந்த அளவுதான் இருக்கும்.

அனைத்து நிலையங்களுக்கும் அடுத்த சில வாரங்களில் இருந்து பிஎஸ் 6 தர பெட்ரோல், டீசல் அனுப்பும் பணி துவங்கும். எனவே, அனைத்து நிலையங்களிலும் முழுமையாக இந்த எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.  எரிபொருளில் சல்பர் அளவு அதிகமாக இருந்தால், சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருக்கும். தற்போது உள்ள பிஎஸ் 4 எரிபொருளில் இது சல்பர் ஒரு மில்லியனுக்கு 50 பங்கு உள்ளது. பிஎஸ்6 எரிபொருளில் இது 10 பங்கு மட்டுமே இருக்கும்.  எனினும், பிஎஸ் 6 ரக எரிபொருள் உற்பத்திக்காக சுத்திகரிப்பு நிலையங்களை தரம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 30,000 கோடி முதலீடு செய்துள்ளன. ஐஓசி 17,000 கோடி முதலீடு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் பிஎஸ் 6 எரிபொருட்களின் விலை, பிஎஸ் 4 எரிபொருட்களை விட அதிகம். எனவே, பெட்ரோல், டீசல் விலை இதற்கேற்ப உயரும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கலாம் என சஞ்சீவ் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : PS , Sulfur Size, BS-6 Petrol, Diesel, Oil Company
× RELATED மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா