×

எனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எதையும் அமெரிக்கா செய்யாது: டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்: ‘‘எனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் செய்ய மாட்டேன்,’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் ைகயெழுத்தாகும் என பரபரப்பாக கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் பிறக்கும் என்றும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் செய்யப் போவதில்லை என டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய உள்ளது. ஆனால், எனது இந்திய பயணத்தின்போது இது நடக்காது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் நடக்கும். பிரதமர் மோடியை எனக்கு அதிகம் பிடிக்கும். குஜராத்தில் விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை, 70 லட்சம் மக்கள் என்னை வரவேற்பார்கள் என்று மோடி கூறியுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் கிரிக்ெகட் ஸ்டேடியம், உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். எனது இந்திய பயணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன்,’’ என்றார்.

தலிபான்களுடன் ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தான் தீவிரவாத அமைப்பான தலிபானுடன் நடத்தி வரும் பேச்சு குறித்து டிரம்ப் கூறுகையில், ‘‘சிறிய இடைவெளிக்குப் பிறகு தலிபான்களுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம். தலிபான்களுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றார்.

வர்த்தகம், பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும்
மத்திய வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ரிங்கலா நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப், உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இந்தியா வருகிறார். இருநாடுகளும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது ஒன்றிணைந்துள்ளன. 25ம் தேதி டிரம்ப்பும், பிரதமர் மோடியும் பாதுகாப்பு, வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பின்னர், இருவரும் சேர்ந்து மதிய உணவு அருந்துகின்றனர். மேலும், டிரம்ப்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் விருந்து அளிக்கிறார்,” என்றார்.  

டிரம்ப் கோபத்துக்கு காரணம்
அமெரிக்காவில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருகிறது. இதை ரத்து செய்யும்படி இந்தியாவுக்கு டிரம்ப் பலமுறை வேண்டுகோளும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. வாஷிங்டனில் டிரம்ப் அளித்த பேட்டியின்போது, ‘உங்கள் பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் நடக்குமா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “வர்த்தக ரீதியாக அமெரிக்காவை இந்தியா நன்றாக நடத்தவில்லை,” என்றார். ‘இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் நடக்காது,’ என்று டிரம்ப் கூறியதற்கு, இந்தியாவின் அதிக வரி விதிப்புதான் காரணம்  என கருதப்படுகிறது.

Tags : Trump ,trip ,India ,US ,announcement ,business deal , India, Trade Agreement, USA, Trump
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...