×

சீர்காழி அருகே சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ1 கோடி சிலைகள் கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பா?

திருச்சி: சீர்காழி அருகே கோயிலில் ரூ1 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கோயில் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவலால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் பழமை வாய்ந்த குமாரசுப்பிரமணிய சுவாமி கோயிலின் கருவறை அருகே ஒரு அறையில் உற்சவர்களான முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளின் ஐம்பொன் சிலைகள் இருந்தது. கடந்த 16ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள், அந்த அறையின் பூட்டை கள்ளசாவி மூலம் திறந்து 3 ஐம்பொன் சிலைகளையும் திருடிச்சென்று விட்டனர். அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களையும் சிலைகளையும் தேடி வருகின்றனர். கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திராவும் நேற்று கோயிலுக்கு வந்து ஆய்வு செய்தார். சிலைகளை திருடுவோர், போலீசில் சிக்காமல் இருக்க அருகில் உள்ள குளம், கிணறுகளில் போட்டுவிட்டு பரபரப்பு அடங்கிய பின்னர் சிலைகளை எடுத்து செல்வார்கள் என்பதால், இந்த சிலைகளும் கோயில் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம்  அடைந்தனர். இதனால் கோயிலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட சரவண பொய்கை குளத்தில் 3 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது.

நேற்று மாலை இப்பணி நிறைவடைந்தது. 10 அடி ஆழத்தில் இருந்த அனைத்து நீரும் வெளியேற்றப்பட்டது. ஆனாலும் சிலைகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஊர் முக்கிய பிரமுகர்கள், கோயில் ஊழியர்கள் சிலரை விசாரணைக்காக இன்று காவல் நிலையம் வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கள்ளச் சாவி மூலம் கதவை திறந்து தான் சிலைகளை திருடி உள்ளனர். எனவே கோயில் ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோயில் அருகே உள்ள குளத்தில் சிலைகளை வீசியிருக்க வாய்ப்பில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு உள்ளனர். எனினும் இப்போது அவர்கள் விசாரணை நடத்த முடியாது. நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் தான் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைப்போம். அதன்பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிந்து விசாரணை நடத்துவார்கள். இவ்வாறு கூறினர்.

Tags : robbery ,Subramaniyaswamy temple ,Sirkazhi , Sirkazhi, Subramaniyaswamy Koi, statues loot
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...