×

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்காக தீயணைப்பு நிலையம் அருகிலேயே குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கு நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் 17 பேர் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் வீரர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பணிக்கு வந்து செல்கின்றனர். தீ விபத்து ஏற்பட்டால் அவசரத் தேவைக்கு தீயணைப்பு வீரர்களை உடனடியாக அழைத்து செல்லும் வசதிக்காக தீயணைப்பு நிலையம் அருகில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி திருநெல்வேலி கோட்ட காவலர் வீட்டுவசதி கழகம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு 187.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து முடிந்த நிலையில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த குடியிருப்பில் நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு 13 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மின்இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. விரைவில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீயணைப்பு அலுவலர் மற்றும் வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : firefighters ,opening ceremony ,Kanjayanakanpatti Road , Aruppukkottai, Opening Ceremony, Residence of Firefighters
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா