×

அதிகாரிகள் இடையே நடந்த நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி: வேலூர் விமான நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்

வேலூர்: வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அப்துல்லாபுரம்- தார் வழி சாலைக்கு மாற்றுப்பாதை அமைக்கும்பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மொத்தம் உள்ள 120 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக 32.52 கோடியில் மேம்படுத்தி சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், 800 மீட்டர் ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் 95 சதவீதம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வேயை விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி புதிய சாலை அமைப்பதற்காக 1.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய கேட்டு தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அனுப்பி வைத்தது. சாலையை முறையாக நெடுஞ்சாலைத்துறை ஒப்படைக்க வேண்டும். ஆனால் சாலையை ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. இதனால் விமான நிலைய பணிகள் முழுவடைவதில் சிக்கல் நீடித்தது.இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 4ம் தேதி போக்குவரத்து முதன்மை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர், வேலூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் நடந்தது.

இதில் அப்துல்லாபுரம்- ஆலங்காயம் மாநில நெடுஞ்சாலை எண் 122ன் ஒரு பகுதியை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக விமான நிலைய ஆணையத்தின் சுற்றுப்புறத்தில் அருகிலேயே ஒரு தற்காலிக மாற்றுச்சாலை சுமார் 1.7 கோடியில் அமைப்பது என்று அனைத்து துறை அலுவலர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையில் விமான நிலையத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. விமான நிலையம் முழுவதும் உயர்மட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மாற்றுச்சாலைக்கான இடமும் ஒப்படைக்கப்பட்டு சில நாட்களில் அங்கு தற்காலிகமாக மண் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் முடிவடையும் அதே நாளில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வரும். உடனடியாக சாலையின் குறுகே அங்கும் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Officers Closing ,Vellore airport ,Roundabout , Officers, Vellore, airport, circuit, work intensity
× RELATED ஊழியர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா...