×

குடியாத்தம் அருகே கிபி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘போத்தராஜா’ சிற்பம் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன் ஆகியோர் நேற்று முன்தினம் மேற்கொண்ட கள ஆய்வில் குடியாத்தம் அருகே கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘போத்தராஜா’ சிற்பம் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆ.பிரபு கூறியதாவது: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வலசை கிராமத்தில் சென்னைப் பல்கலைக் கழக வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர் அகழாய்வுப் பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தென்னந்தோப்பு ஒன்றில் பாழடைந்த கோயில் ஒன்றைக் கண்டோம். அக்கோயிலானது செங்கல்லும், மண்ணும் கொண்டு கட்டப்பட்டு சுண்ணாம்புக் கலவையினால் பூசப்பட்டுள்ளது. 3 நிலைகளைக் கொண்ட இக்கோயிலானது செங்கல் தனி வகையினைச் சார்ந்ததாகும். இக்கோயிலுக்குள் கல்லால் ஆன சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.இச்சிற்பத்தில் ஒரு ஆண் தனது இடது காலைத் தரையில் ஊன்றியவாறு காட்சியளிக்கிறார். இடையில் பெரிய போர் வாளினையும், வலது கையில் கத்தியினையும் ஏந்திய நிலையில், தன் இடது கையால் ஒரு விலங்கினைப் பிடித்தவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார். இச்சிற்பத்தில் உள்ளவர் திரவுபதியம்மன் கோயில்களில் காவல் தெய்வமாக வழிபடப்படும் ‘போத்தராஜா’ ஆவார்.

வட மாநிலங்களில் இத்தெய்வ வழிபாடு பிரபலமான ஒன்றாகும். இக்கோயிலுக்கு 10 அடி முன்பாக கற்களால் ஆன மண்டபம் ஒன்றும் உள்ளது. இது பராமரிப்பு இன்றிப் பாழடைந்த நிலையில் புதர்மண்டிக் கிடக்கிறது. அநேகமாக இது திரவுபதியம்மன் கோயிலாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் திரவுபதி கோயிலின் முன்பாகவே ‘போத்தராஜா’ சிற்பம் இடம்பெறுவதுண்டு. பிற்காலக் கட்டிடக் கலையினை ஒத்த இக்கோயிலானது கி.பி.16 நூற்றாண்டிற்குப் பிந்தையதாக இருக்கக்கூடும். இன்றும் வழிபாட்டில் உள்ள இச்சிற்பமானது 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gudiyatham ,statue ,Botaraja , Gudiyatham, Pottaraja Sculpture, Detection
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...